09/04/2024 (1130)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவள் வாய் ஒரு திரைப்படப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருக்கிறது…
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா …
“தும்மல், இருமல், விக்கல், கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பிறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி இதெல்லாம் கேட்டு வராது; தானா வரும். வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது, போனாலும் தடுக்க முடியாது … “என்று ஒரு வசனம் வரும். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் எழுதியது. ரஜினி நடித்த முத்து என்ற திரைப்படத்தில் …
சரி இந்த வசனம் எதற்கு என்ற கேள்விதானே? இதோ வருகிறேன். அவள் அவனின் மேல் உள்ள காமத்தை அடக்க முயல்கிறாளாம், அது தும்மல் போல வெளிப்படுகிறதாம். பாவம்... அவள் என்ன செய்வாள் ...
அவளுக்காக ஒரு குறள் இதோ!
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். – 1253; - நிறை அழிதல்
யானோ காமத்தை மறைப்பேன் மன் = நானோ இந்தக் காமத்தை மறைந்து தொலையட்டும் என்று மறைக்க முயல்வேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றி விடும் = ஆனால், அதுவோ, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தும்மல் போல என் மனத்துள் எழுந்து என்னை அதிர வைக்கும்; மன் - ஒழியிசை
நானோ இந்தக் காமத்தை மறைந்து தொலையட்டும் என்று மறைக்க முயல்வேன். ஆனால், அதுவோ, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தும்மல் போல என் மனத்துள் எழுந்து என்னை அதிர வைக்கும்.
… ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ …
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா … கவிஞர் வாலி, சொல்லத்தான் நினைக்கிறேன், 1973
தும்மலை அடக்கினால் சிக்கல்கள் எழலாமாம். தும்மலை அடக்காதீங்க என்கிறார்கள் மருத்துவர்கள். கவனமாக இருங்க.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments