17/10/2021 (236)
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் எனும் அதிகாரத்தில் இருந்து குறள்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். நேற்று ஓரார், தொடரார் ஆக இருக்க வேண்டும் என்று பார்த்தோம்.
மற்று என்பது வினை மாற்றின்கண் வந்துள்ளது என்று சொல்லி நிறுத்தியிருந்தார் ஆசிரியர்.
நம்மாளு: ஐயா, வினை மாற்று என்றால் என்ன?
ஆசிரியர்: ‘மற்று’ என்பது ஒரு இடைச்சொல். அது மூன்று விதத்தில் பயின்று வரும். அவையாவன: வினை மாற்று, அசை நிலை, பிறிது. இவற்றில் ‘அசை நிலை’ச் சொற்களுக்கு குறிப்பிட்டப் பொருள் கிடையாது. ஒரு நயத்திற்காக வருவது என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.
நாலடியாலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.
மற்று அறிவாம் நல்வினையாம் இளையம் என்னாது
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின்
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு --- நாலடியார் 19
பொருள்: நல்வினைகளைத் தவிர மற்ற வினைகளையெல்லாம் இப்போது செய்வோம் ஏன் என்றால் எங்களுக்கு வயது இருக்கிறது – என்று எண்ணாமல் கையில் பொருள் இருக்கும் போழ்தே – அதை மறைக்காமல் அறக்காரியங்களைச் செய்வீர்களாக. புயல் அடிக்கும் போது பழுத்த பழம் மட்டும் விழுவதில்லை, நல்ல காய்களும் கூட விழும்.
இந்தப் பாடலில் ‘மற்று’ என்பது நல்வினைத் தவிர வேறு வினைகள் என்ற பொருளில் வருகிறது. ஆகையால் இது வினை மாற்று.
“எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.” --- குறள் 695; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
‘மற்று அப்பொருளை விட்டக்கால்’ என்பதற்கு மன்னன் மறைத்து வைத்ததை மாற்றி அறிவித்து விட்டதால் – இதுவும் வினை மாற்று.
‘மற்று’ என்பது பிறிது என்னும் பொருளிலும் வரும்.
உதாரணம்:
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.” ---குறள் 380; அதிகாரம் – ஊழ்
இந்தக் குறளில் ‘மற்று ஒன்று’ என்பது ‘பிறிது ஒன்று’ என்றப் பொருளில் வந்துள்ளது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments