16/09/2022 (565)
‘மை’ போடுவது என்றால் மயக்குவது என்று பொருள். அஃதாவது, ‘மை’ என்றால் மயக்கம்.
இறுமாப்பு என்றால் பெருமை. இறுமாத்தல் என்றால் ரொம்பவே பெருமைப்படுவது.
அதைப் போல ‘மையாத்தல்’ என்றால் ரொம்பவே மயங்கிப் போவது.
சரி, இதற்கென்ன இப்போது என்கிறீர்களா?
அதாவது, அவனின் நெஞ்சம் ரொம்பவே மயங்குதாம். அதாவது ‘மையாத்தல்’ பண்ணுதாம்.
எதைப்பார்த்து? மலர்களைக் காணும் போதெல்லாம்!
எதனால்? அவளின் கண்களைப் போல இருக்கிறது என்று அவனின் நெஞ்சம் மயங்குதாம்.
அந்த மட நெஞ்சை அவன் கடிவது போல ஒரு குறள்.
என்ன நெஞ்சே நீ அடிக்கடி மயங்குகிறாய். அவளின் கண்களும் இந்தப் பூக்களும் ஒன்றா என்ன?
அவள் வேற LEVEL. பலர் காணும் இந்தப் பூக்கள் எல்லாம் அவள் என்று நினைப்பாயோ? உன்னை வைத்துக் கொண்டு நான் படும்பாடு இருக்கிறதே, என்னாலே முடியலை…
“மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர் காணும் பூவொக்கும் என்று.” --- குறள் 1112; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
மட நெஞ்சே இவள் கண்கள் பலர் காணும் பூக்களை ஒக்கும் என்று பூக்களைக் காணும் போதெல்லாம் மயங்குகிறாய்!
நெஞ்சே இவள்கண் பலர் காணும் பூவொக்கும் என்று = (மட) நெஞ்சே இவள் கண்கள் பலர் காணும் பூக்களை ஒக்கும் என்று; மலர்காணின் மையாத்தி = பூக்களைக் காணும் போதெல்லாம் மயங்குகிறாய்!
நம்மாளு:
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை …”
(தெய்வத்தாய் 1964, கவிஞர் வாலி அவர்களின் கற்பனையில், இன்னிசை இரட்டையர்கள் விஸ்வநாதன்- இராமூர்த்தி இசையில் சிம்மக்குரலோன் T.M.சௌந்தரராஜன் பாடியது)
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
Comments