04/03/2022 (371)
மென்மையான ஒன்றைச் சொல்ல ரொம்பவே கடினப்படவேண்டியிருக்கு. இது ஒரு முரண் மாதிரியிருந்தாலும் இதுதான் இயற்கை.
மென்மையான பொருளை உண்ணுகிறோம். அதாவது உணர்ந்து உய்க்கிறோம். உதாரணம்: சோறு.
கடினமானவற்றை தின்னுகிறோம். உதாரணம்: காய், கிழங்கு.
நீர்மையானவற்றைப் பருகுகிறோம். உதாரணம்: தண்ணீர், பால்.
தின்னவோ, உண்ணவோ, பருகவோ முடியலை என்றால்?
சரியா சொன்னீங்க, நக்குகிறோம். உதாரணம்: ஊறுகாய்
இப்படி சாப்பிடும் பொருட்களின் பண்புகளுக்கு ஏற்றார் போல் நாம அதை சாப்பிடுகிறோம். சாப்பிடுதல் – பொதுப் பெயர்; உண்ணல், தின்னல் முதலியன சிறப்புப் பெயர்கள்.
இது நிற்க. மென்மையானது எது என்று கேட்டால் மலர், பூ என்போம்.
மலரினும் மெல்லியது எது என்றால் அதுதான் ‘காமம்’ என்கிறார் நம் பேராசான். அதை ரொம்ப சிலர்தான் உணர்ந்து செயல்படுவர் என்றும் சொல்கிறார்.
பரிமேலழகப் பெருமான் கீழ்கண்டவாறு விரிக்கிறார்:
“குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லிது' என்றும் கூறினான்.”
என்ன என்ன ஒத்துப்போகனும் என்று அடுக்குகிறார். குறிப்பில் தொடங்கி, ஆசை, நுகர்ச்சி, அதில் இன்பம் எல்லாம் ஒன்று போல கூடி வர அதற்கு ஏற்றவாறு காலம், இடம், உபகரணங்கள் இப்படி எல்லாம் சரியாக இருந்தால்தான் அந்த மெல்லிய உணர்வை அனுபவிக்க முடியுமாம். அதனால், அதைப் பெறுபவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள் என்று விளக்குகிறார்.
எப்போதும் வருவது அல்ல கவிதை; எப்போதோ வருவதுதான் கவிதை!
எங்க குறள் என்று கேட்கிறீர்கள். இதோ:
“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.” --- குறள் 1289; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
மலரினும் மெல்லிது காமம் = மலரைவிட மென்மையானது காமம்/அன்பு; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் = அதை அறிந்து நுகரத் தலைப்படுபவர்கள் வெகு சிலரே; செவ்வி = நுகர, முயல
இதில் ஒரு ரகசியம் இருக்கு. உறவும் நட்பும் வளரவும் இதேதான். மனித உறவுகளே மென்மையானதுதானே! மென்மையாய் பழகுவோம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments