08/10/2023 (946)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒரு காட்டிலே ஒரு நரியார் பொறுமையாக உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாராம். அந்தச் சமயத்திலே பக்கத்திலே ஏதோ சலசலப்பு கேட்டுதாம். நரியார் எச்சரிக்கையாயிட்டார் (உஷாரயிட்டார்).
நன்றாக காதாலே கூர்ந்து கவனித்து, சத்தம் வந்த திசையிலே, கண்ணைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தார். அவருக்கு ஒரு சிங்கம் ஒளிந்திருப்பதுபோலத் தெரிந்தது. எடுத்தார் ஓட்டம்.
பசியோடு இருக்கும் சிங்கம் விடுமா? அந்த நரியாரைத் துரத்த ஆரம்பிச்சுட்டுதாம். நரி தலைத் தெரிக்க ஓட, சிங்கம் அதைத் துரத்த, பெரும் ஓட்டப் பந்தயம்தான்.
நரிக்கு இப்போ மூச்சு வாங்குதாம். இது என்னடா நமக்கு வந்த சோதனை. இந்தச் சிங்கத்துக்கு நாம்தான் இன்றைக்கு கிடைச்சோமா? ன்னு யோசனை செய்து கொண்டிருக்கும் போதே, அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழே ஒரு சிறு பொந்து ஒன்று இருந்துதாம். இதில் நுழைந்துவிட்டால், சிங்கத்தால் உள்ளே நுழைய முடியாது. நாம் அது போகும் வரையில் இருந்துவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று அந்த பொந்தினுள் போய் நுழைந்து அமர்ந்து கொண்டதாம்.
சிங்கம் எத்தனை நரியைப் பார்த்திருக்கும். அது அமைதியாக அந்த மரத்தின் அருகிலேயே சத்தம் போடாம உட்கார்ந்து கொண்டதாம்.
நரிக்கு வெளியே வரவும் பயம். உள்ளே இருக்க இருக்க அதற்குச் சலிப்பாக இருந்ததாம். அதாங்க, போர் அடிச்சுதாம். யாராவது கூட இருந்தால் பேசிக் கொண்டாவது இருக்கலாம். என்ன நிலைமை நம்ம நிலைமை என்று நொந்து கொண்டதாம். உடனே, அதற்கு ஒரு யோசனை வந்ததாம். நாம் ஏன் நம்மகூடவே பேசக் கூடாது என்று நினைத்ததாம்.
சரியென்று, காதுகளைப் பார்த்து கேட்டதாம். ஏய், காதுகளே நீங்கபாட்டுக்கு இருந்த இடத்திலேயே இருக்கறீங்க. உங்களாலே எனக்கு என்ன பயன்? பதிலை ஒழுங்காச் சொல்லுங்க. இல்லை என்றால் உங்களை அந்தச் சிங்கத்துக்கு கொடுத்துடுவேன் என்று பயமுறுத்துச்சாம்.
காதுகளோ, என்ன நரியாரே இப்படிச் சொல்லிட்டீங்க. நாங்கதானே, கூர்ந்து கவனித்துச் சிங்கம இருப்பதை முதலில் தெரிவித்தோம், அதனாலேதானே நீங்க தப்பிச்சீங்க என்றதாம்.
அதுவும் சரிதான். நீங்க இருங்க. இந்த கண்களைக் கேட்போம் என்று கண்களிடமும் அதே கேள்வியை வைக்க, கண்களும், என்ன தலைவரே நாங்கதானே அந்தச் சிங்கத்தையும் பார்த்தோம், இந்த மரப் பொந்தையும் உங்களுக்கு காண்பித்தோம், உங்களுக்கே நியாமாக இருக்கா எங்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்க என்றதாம்.
அதுவும் சரிதான். சரி இருந்துக்கோங்க. இந்தக் கால்களைக் கேட்போம் என்று கேட்க்கப் போக அந்த நான்கு கால்களும் ஒரு சேர, ஐயா, இவங்க எல்லாம் பார்த்தாங்க, கேட்டாங்க அவ்வளவுதான், நாங்கதான் உங்களைத் தூக்கிக் கொண்டு அதி வேகமாக வந்தோம். அதை மறந்துட்டீங்களே என்றதாம்.
அடடா, ஆமாம். சரி, உங்களையும் நான் பார்த்துக்கறேன் என்றதாம். நரியார் அடுத்து எதனிடம் கேட்கலாம் என்று யோசிக்க, அதன் வால் கவனத்துக்கு வந்தாம்.
ஏய், வாலு, இவர்கள் எல்லாரும் எனக்கு ஏதோ ஒரு வகையிலே உதவி செய்தாங்க. நீ என்ன செஞ்ச உன்னை நான் பாதுகாக்க? என்று கேட்டதாம்.
வாலு பாவம். திரு திருவென்று சிலிர்த்துக் கொண்டே, எசமான், நீங்க வேகமா ஒடி வரும்போது நான் பத்திரமாக உங்க கால்களுக்கிடையே ஒளிஞ்சிகிட்டிருந்தேன் என்றதாம்.
வந்ததே நரியாருக்கு கோபம். அப்போ, உன்னாலே ஒரு பயனுமில்லை. உன்னைத்தான் சிங்கத்துக்கு கொடுக்கணும் என்று சொல்லிக் கொண்டே, அதன் வாலை அந்தப் பொந்துக்கு வெளியே நீட்டுச்சாம்.
அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று சொல்லணுமா என்ன?
அந்த நரி வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால்?
எதை அடக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த நாக்கு இருக்கிறதே நாக்கு அதை மட்டுமாவது அடக்க வேண்டும். நாக்குக்கு இரண்டு வேலைகள். ஒன்று பேச. மற்றொன்று உண்ண. இரண்டுமே அளவோடு இருக்கணும். இல்லையென்றால்?
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” --- குறள் 127; அதிகாரம் – அடக்கமுடைமை
மேற்கண்டக் குறளை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். காண்க 12/04/2023 (769).
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் மதிவாணன்.
(மேலே உள்ள கதை என் ஆசான் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் சொல்லக் கேட்டது. நன்றிகளுடன் பதியப்பட்டுள்ளது)
Комментарии