28/04/2022 (426)
“யாதும் ஊரே…” என்ற பாடலுக்கு அறிஞர்கள் பலரின் உரைகள் இருக்க நானும் முயல்வது விண்ணை என் விரி கைகளால் அளப்பது போல. அளக்க முடியாவிட்டாலும், என் கைகளுக்கு ஒரு பயிற்சியாகவாவது (exercise) இருக்காதா என்ன? என் ஆசிரியர் சொன்னதை வைத்து முயல்கிறேன். இது நிற்க.
இந்தப் பாட்டு, உண்மையைச் சொன்னால், புரிந்து கொள்ள ரொம்பவே ஒரு சுலபமான பாட்டுதான். இது மனதை அமைதிப் படுத்தப் பாடிய பாடலைப் போல இருக்கு. இந்தப் பாடல், இளமைத் துடிப்பில் இருப்பவர்களுக்கு இல்லை என்றும் தோன்றுகிறது.
இது, கொஞ்சம் முதிர்ச்சி அடைந்தவர்களுக்கு சொன்னாற்போல இருக்கு. சிலர், வயதானாலும் வம்படியாக பல வேலைகளைச் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு நிதானம் வேண்டும், நிம்மதி வேண்டும்.
இங்கேயும், அங்கேயும் ஓடி கடைசியிலே, என்ன வாழ்க்கைடா இதுன்னு அலுத்துக்கவும் வேண்டி இருக்கும் பல சமயம். அந்த நிலை வராமல் இருக்கனும் என்றால், அவர்கள் இந்தப் பாட்டைத் திரும்ப திரும்ப படிக்கனும். இந்தப் பிரபஞ்சமே ‘மிஸ்ரப் பிரபஞ்சம்’தான். (நாம ரொம்ப நாளைக்கு முன்னாடி இதைப் பற்றி சிந்தித்து இருக்கிறோம். காண்க 21/09/2021 (210).)
இரண்டும் கலந்துததான் இந்த உலகம். எந்த இரண்டு? இன்பமும் துன்பமும்தான். கி.மு. முன்னூறுகளில் (வள்ளுவப் பெருந்தகை காலமும் கிட்டத்தட்ட அதே காலம் என்கிறார்கள்) கிரேக்கத்தில் ஸ்டோயிசம் (stoicism) என்ற ‘இன்பதுன்ப நடு நிலைக் கோட்பாடு’ ஒன்று தோன்றியது. இன்பத்தைக் கண்டு மயங்காமலும் துன்பத்தைக் கண்டு துவளாமலும் இருப்பது தான் அந்த நிலை. இதைத்தான் ‘Stoic silence’ என்கிறார்கள்.
அந்த நிலைக்குத்தான் நம்ம ஆசான் கணியன் நம்மை கூட்டிச் செல்கிறார். ஆனால் என்ன, இந்த மாதிரி கொள்கைகள் எல்லாம் பதிவு செய்யப்படாத காலத்திலேயே பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
“எல்லா இடமும் நம்ம ஊர்தான், அங்கே இருப்பவங்க எல்லாம் நம்ம சொந்தக்காரங்கதான். அதனாலே, ரொம்ப கவலைப் படாதே”ன்னு ஆரம்பிக்கிறார். அடுத்து, அப்படியே ஒரு பாய்ச்சல்: “சும்மா ஏமாத்திக்காதே, உனக்கு வாய்ச்சதெல்லாம், அதாவது, நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் நீ ஆடின ஆட்டம்தான் காரணம்”ன்னு வினைக் கொள்கையை போடுகிறார்.
நம்மாளு: சரி நான் என்ன பண்ணனும்?
“அதற்கு மருந்து நீயேதான். நொந்து போவதோ, இல்லை பரவாயில்லை என்று அடுத்து செல்வதோ எல்லாம் உன் மனசிலேதான்னு இருக்கு”ன்னு லேசா கொஞ்சம் மருந்து போட்டுவிடுகிறார்.
அடுத்து, “உனக்குத் தெரியாதா? சாவோ, வாழ்வோ எல்லாம் வந்து வந்து போகும். எதுவுமே புதியது இல்லை. அதுக்கெல்லாம் ரொம்ப மெனக்கெடாதே, அலட்டிக்காதே” என்கிறார்.
இந்தப் பாடலுக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பு இருப்பது போலவே இருக்கு இல்லையா?. ஆனால், எந்த அர்ஜீனனுக்கு சொன்னாருன்னுதான் தெரியலை! அர்ஜீனன் ஒரு பக்குவத்துக்கு வந்த பின்தான் கிருஷ்ண பரமாத்மா அவனுக்கு உபதேசம் பண்ணுகிறார். அவ்வளவு உபதேசத்தையும் கேட்டுட்டு திருந்தினானா அர்ஜீனன் என்றால் இல்லை. மூன்றாவது நாளே மீண்டும் கலங்குகிறான். சரி, சரி, அந்த கதையை அப்புறமா பார்க்கலாம். நாம பாட்டுக்கு வருவோம்.
பார்த்தீங்களா, ஆசான் கணிய பெருமானின் பாடல் எவ்வளவு சுலபமா இருக்கு விளங்கிக் கொள்ள! இப்போ பாட்டைப் பார்க்கலாம்:
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே …
அடுத்து வரும் வரிகளை நாளைக்குப் பார்க்கலாமா?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments