27/04/2022 (425)
புறநானூற்றில் 192ஆவது பாடலாக அமைந்துள்ள “யாதும் ஊரே …” எனும் கணியன் பூங்குன்றனார் பாடலை, பல முறை, நாம் பல விதத்தில் சிந்தித்து வந்து இருக்கிறோம். ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
யாவரும் நமது சகோதர சகோதரிகள், அதாவது நமது ‘சுற்றம்’ என்ற ஒரு உயரிய கருத்தை (universal brotherhood) முதல் வரியிலேயே முத்தாய்ப்பாக சொல்வதினால், இவ் வரிகள் உலகம் முழுவதிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மேற்கோளை முதன் முதலில், 1966ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் 21ஆவது அமர்வில் GG பொன்னம்பலம் என்ற இலங்கையை சேர்ந்த பெருமகனார் முடிவாக எடுத்து வைத்தார்.
2007ல் மக்களின் President (குடியரசுத் தலைவர்) என்று நாமெல்லாம் கொண்டாடும் அப்துல் கலாம் பெருமகனார், ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசும் போது இந்த மேற்கோளைக் காட்ட, ஐரோப்பிய ஒன்றியம் வியந்து எழுந்து நின்று கர ஒலிகளை எழுப்பியதை நாம் அறிவோம்.
நமது இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், ஐ.நா. பொது சபையின் 74ஆவது அமர்வில் (2019), இவ் வரிகளை மேற்கோள் காட்டினார்.
இது ஒரு தவிர்க்க இயலாத, காலம் கடந்த கருத்தினை, பல காலங்களுக்கு முன்பே பதிவு செய்துள்ள ‘தமிழின்’ சிந்தனைச் செறிவை எடுத்துக் காட்டுகின்றது.
இப்பாடல் சொல்வது அது மட்டுமல்ல. வரிக்கு, வரிக்கு கருத்துச் செறிவு நிறைந்த பாடல் இது.
ஊழ் என்பதை விளக்கவும் , வினைக் கொள்கையை அறிந்து கொள்ளவும், இயற்கையின் இயல்பை அறிந்து தெளியவும் இப்பாடல் உதவுகின்றது. இப் பாடல் முழுமையாக:
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. “--- பாடல்192; புறநானூறு
மேலும் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments