29/01/2024 (1059)
அன்பிற்கினியவர்களுக்கு:
யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். - 346; - துறவு
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் = யான்- எனது என்னும் செருக்குகளை அறுத்து ஒழிப்பவர்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் = வான்புகழ் கொண்டவர்களுக்கு ஈடான புகழ் உலகத்தில் நிலைப்பர்.
யான்- எனது என்னும் செருக்குகளை அறுத்து ஒழிப்பவர், வான்புகழ் கொண்டவர்களுக்கு ஈடான புகழ் உலகத்தில் நிலைப்பர்.
எப்படி அறுப்பது என்றால் முதலில் “எனது பொருள்” என்ற பற்றுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று அவற்றை முழுவதும் நீக்கி, அதன் பின் “நான் தான் எல்லாம்” என்ற செருக்கையும் அறுக்க வேண்டும். அப்படி அறுத்தால் ஞானம் தோன்றும்.
மயக்கதிலேயே ஆழ்த்தி வைக்கும் பொருள்களின் மேல் உள்ள பற்றுகள் நீங்கவில்லை என்றால் மனத்திற்கு அமைதி ஏற்படாது. நிறைவேறாத ஆசைகளோடு மரணிக்க வேண்டியதுதான் என்கிறார்.
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. – 344; - துறவு
மயல் = மயக்கம்; பெயர்த்து = குலைத்து; நோன்பிற்கு ஒன்றின்மை இயல்பு ஆகும் = துறவறப் பயணத்தில் பற்றுகளை ஒவ்வொன்றாக முற்றிலும் அழித்தல் முறைமை ஆகும்; மயல் ஆகும் உடைமை மற்றும் பெயர்த்து = மயக்கத்தினால் நீக்க முடியாமல் இருக்கும் சில பொருள்களின் மேல் உள்ள பற்றானது முயன்று முன் நீக்கிய பற்றுகளின் மேல் இருக்கும் உறுதியையும் குலைத்துவிடும்.
துறவறப் பயணத்தில் பற்றுகளை ஒவ்வொன்றாக முற்றிலும் அழித்தல் முறைமை ஆகும். மயக்கத்தினால் நீக்க முடியாமல் இருக்கும் சில பொருள்களின் மேல் உள்ள பற்றானது, முயன்று முன் நீக்கிய பற்றுகளின் மேல் இருக்கும் உறுதியையும் குலைத்துவிடும். அஃதாவது, துறவறப் பயணம் சறுக்கலைச் சந்திக்கும்.
ஆதலினால், கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள்களின் மேல் உள்ள பற்றுகளை மொத்தமாக நீக்குங்கள் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments