11/09/2021 (200)
இது வரை: அண்ணன் அவளைப் பார்க்கிறார். அவள் தன்னைப் பார்க்க மாட்டாளான்னு ஏக்கம். அவள் அண்ணனை பார்க்கிறாள். அண்ணனுக்கு அந்தப் பார்வை - கவிஞர் தாமரையோட ’அடியே கொல்லுதே, அழகோ அள்ளுதே …’ங்கிற மாதிரி இருந்தது. கொஞ்சம் தடுமாற்றம். அவள் உண்மையிலேயே காதல் கொண்டுதான் பார்த்தாளா, இல்லை அது தற்செயலா தெரியலையேன்னு குழப்பம், வலி. அப்போது, அவள் அண்ணனை மறுபடியும் பார்க்கிறாள்.. இதுதான், இது தான் எனக்கு மருந்து. அப்பாடா, இப்போ பரவாயில்லை. இருந்தாலும், நாம நினைப்பது உண்மைதானா இல்லை காட்சிப் பிழையா? பல கேள்விகள். மறு நாள், அவள் ஒரு கள்ளப்பார்வை பார்க்கிறாள். அண்ணன் உறுதி பண்ணிவிடுகிறார். அது மட்டுமில்லை. கற்பனை சிறகடித்துப் பறக்க ஏங்கோ போயிட்டார். அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் நெருக்கம். நேராகவே பார்க்கிறாள். அண்ணன் பார்த்த உடனே வெட்கத்தால் தலை சாய்கிறது. அன்பென்னும் பாத்தியில் காதல் எனும் பயிர்களுக்கு அவள் வார்த்த நீர் இதுன்னு தெரிந்து கொள்கிறார்.
“இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து.” ---குறள் 1091
“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது.” --- குறள் 1092
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.” --- குறள் 1093
அடுத்து அப்படியே வளர்கிறது. பார்வை பரிமாற்றம்தான். இன்னும் ‘பேச்சுவார்த்தை’ தொடங்கவில்லை. இருவருக்கும் பார்த்துக்கொண்டே இருக்கனும் போல தோன்றுகிறது. ஆனால், அவளை ஏதோ, நாணம் என்று சொல்கிறார்களே அது தடுக்கிறது. அண்ணன் பார்க்கும்போது பார்க்காத மாதிரி கிழே என்னத்தையோ தேடுவது; பார்க்காத போது பார்ப்பது என்கிற விளையாட்டு தொடங்குது …
சரி, நாம குறளுக்குள் போவோம்:
“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.” ---குறள் 1094; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
இதற்கு பொருள் சொல்லத்தேவையான்னு கேட்பதுபோல் தெளிவான குறள். நாம இதை ‘மெல்ல’ முன்பே பார்த்துவிட்டோம். ‘மெள்ள’த் தேடி அதைப் பாருங்க தேவைப்பட்டால்! இது நிற்க.
பார்வை, இப்போ மென்சிரிப்பு ஆயிட்டுது. இருந்தாலும் …
நாளை தொடருவோம். நன்றிகளுடன், அன்பு மதிவாணன்
(இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கு நம் தொடர். இன்றோடு இரு நூறு நாள் ஆயிட்டுதாம்! ம்ம்…)
Comments