top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

யாவர்க்குமாம் நட்ட கல்லைத் ...

20/12/2022 (656)

இன் சொல் பேசுவது முக்கியம். அதை எப்போதும் பேசுவது மிக மிக முக்கியம். அதுவும் அன்பின் நெகிழ்ச்சியால் பேசுவது மிகச் சிறப்பு.


என்னிடம் வசதி இல்லையே, எப்படி நான் மற்றவர்களுக்கு உதவுவது? எப்படி நான் கரை சேர்வது? என்று எந்தக் கவலையும் வேண்டாம்.


இறைவனை, இயற்கையை வணங்க வேண்டுமா? செய்ய வேண்டியதெல்லாம் இலைகள் எல்லாம் பச்சையாக இருக்கச் செய்யுங்கள். அதாவது, பயிர்களை வாட விடாது இருக்கச் செய்யுங்கள்.


“வாடிய பயிரைக் கண்ட பொதெல்லாம் வாடினேன்” என்கிறார் வடலூர் வள்ளல் பெருமான். வாடியப் பயிருக்கு தண்ணிர் ஊற்றுங்கள். அதுவே பெரிய செயல். தலைமுறைக்கும் அது உதவும். இதுதான் “green initiative”. புதிதாக மரம் வைப்பதைவிட இருக்கும் மரங்களையும் செடி கொடிகளையும் காப்பாற்றுங்கள். உலகம் இனிமையானதாக இருக்கும் தலைமுறைக்கும்!


வடலூர் வள்ளல் பெருமான் உபதேசக் குறிப்புகளில் 48ஆவது குறிப்பு:

சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.” என்கிறார்.


உள்பொருளும் மறை பொருளும் நிறைந்தது என்கிறார்கள் இவ்விரண்டும்.


இறைவனுக்கு பச்சிலை என்றால் பச்சிலைகளைப் பறித்து இறைவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிலா ரூபங்களிடம் சமர்ப்பிப்பது மட்டுமல்ல “இறைவற்கு ஒரு பச்சிலை”.


பச்சிலைகளின் பயன் என்ன? அது பிற உயிரினங்களுக்கு உதவும். பச்சிலைகளை வளர்த்து விட்டீர்களா, அது பசுவிற்கு உணவு. பசு என்றாலே உயிர்கள் என்று பொருள்.


பச்சிலைகளும், பசு தரும் பாலும் நமக்கு உணவாக அமையும். நீங்கள் உண்ணும் போது, இயலாதவர்களுக்கு ஒரு கைப்பிடி அதுவே ஈகை.


இது மட்டும் போதாது. மிகமுக்கியமான ஒரு குறிப்பு ஒன்று இருக்கிறது. அதுதான் அனைத்து உயிர்களிடமும் இன்சொல் பேசுதல்.


பேசுதல் என்பது வாயினால் மட்டும் நிகழ்வதில்லை. பேசுதல் என்பது செயல்களைக் குறிக்கும்.


உடலை வளர்ப்பது உணவு என்றால் உயிரை, உள்ளத்தை வளர்ப்பது இன்சொல்.

இதை திருமூலப் பெருமான் இவ்வாறு சொல்கிறார்:

“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.” --- திருமந்திரம் முதல் தந்திரம், அறஞ்செய்வான் திறம், பாடல் 2 (பாடல் 252), திருமூலப் பெருமான்


‘இன் சொல்’ என்ற குறிப்பை நம் பேராசான் திருக்குறளில் பல இடத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். சிலர் வாயினால் தேனொழுகப் பேசினால் போதும் என்று நினைப்பார்கள். அதுவல்ல இன் சொல் பேசுதல். சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும். அதுவும் இனிமையானதாக வேண்டும்.


இல்லையென்றால் சிவாக்கியப் பெருமான் சொன்னது போல எல்லாம் வெளி வேடங்களாகிவிடும். நாம் ஏற்கனவே பார்த்தது தான். மீள்பார்வைக்காக காண்க 04/05/2022.


நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?” --- பாடல் 520; சிவவாக்கிய சித்தர்.


இன்று தத்துவ விசாரமாகிவிட்டது. இது நிற்க. நாளை குறளைப் பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.


இன் சொல்லை மட்டும் நினைவில் வைத்து செயல்படுங்கள் என்றார்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.

உங்கள் அன்பு மதிவாணன்






Comments


Post: Blog2_Post
bottom of page