30/06/2022 (489)
மாது, மது, சூது ஆகிய மூன்றினால் வரும் குற்றங்களை முறையே வரைவின்மகளிர் (92), கள்ளுண்ணாமை (93), சூது (94) ஆம் அதிகாரங்களில் எடுத்து வைக்கிறார் நம் பேராசான்.
மாது, மது, சூதின் மேல் மனம் வைத்தவர்களிடம் செல்வம் தங்காது. வறுமையே மிஞ்சும் என்று குறித்த குறளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க - 18/06/2022 (477). மீள்பார்வைக்காக:
“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.” --- குறள் 920; அதிகாரம் – வரைவின் மகளிர்.
திரு நீக்கப் பட்டார் தொடர்பு = செல்வம், வளமை என்பது அவர்களுக்கு இல்லை என்று விதித்திருப்பவர்கள் விரும்பித் தொடர்பு வைத்திருப்பது; இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் = வரைவின் மகளிரும், மதுவும், சூதும்.
வரைவின்மகளிர் (92) மற்றும் கள்ளுண்ணாமை (93) அதிகாரங்களை ஒரு பார்வை பார்த்துள்ளோம். அதனைத் தொடர்ந்து சூது(94) எனும் அதிகாரத்தைப் பார்ப்போம்.
சூது என்றால் என்ன?
மற்றவர்கள் பொருளைக் குறுக்குவழியில் அடைய நினைப்பது. அதற்காக சிறிது செலவானாலும் பரவாயில்லை என்று நினைப்பது.
துரியோதனன், பாண்டவர்களை வெல்ல என்ன வழி என்று சகுனியிடம் கேட்கிறான். கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு வழி சொல்கிறேன் கேள். அதுதான் சூது. தலைகளை உருட்டாமல் தாயக்கட்டைகளை உருட்டினால் போதும். தருமனுக்கு சூதில் ஒரு விருப்பம் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி நாம் அவர்களை வென்றுவிடலாம் என்கிறான். துரியோதனன் மகிழ்கிறான்.
அதைக் கேட்ட, கர்ணன் கொதிக்கிறான். கர்ணனின் இயல்பைக் காட்டும் ஒரு அற்புதமான இடம். போர் புரியும் வல்லமையை விட்டு சூதா, வஞ்சனையா, அவ் வழி சரியில்லை என்கிறான்.
நான் ஒரு அம்பினைத்தொடுத்தால் யார் அதிலிருந்து மீள முடியும். போர் புரியும் திறன் இல்லாதவர்கள்தான் இது போன்று யோசிப்பார்கள் துரியோதனா!
சூது அழகில்லை துரியோதனா! என்கிறான் அங்க தேசத்து அரசன் கர்ணன்.
“வெஞ்சிலை குனித்தோர் அம்புயான்விடின் வெகுண்ட வேந்தர்
எஞ்சிவிண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்கவல்லார்
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர் கோமான்.” --- வில்லிபாரதம், சபா பர்வம், சூதுபோர்ச் சருக்கம், பாடல் -20
வெஞ்சிலை = சிறந்த வில்லை; குனித்து = வளைத்து; வஞ்சனை = சூது; அஞ்சினம் = பயப்படுவது; அங்கர் கோமான் = கர்ணன், அங்க தேசத்து அரசன்
எதை, எதை எப்படி எதிர் கொள்ள வேண்டுமோ அதை, அதை அப்படித்தான் எதிர் கொள்ள வேண்டும்.
நாளை தொடரலாம் என்றார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments