16/03/2024 (1106)
அன்பிற்கினியவர்களுக்கு:
இதோ, அவர் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவர் வந்த உடன், மனத்தில் ஒரு பக்கம் மீண்டும் பிரியப் போகிறேன் என நினைத்துக் கொண்டே “நீயும் நானும் வேறில்லை” என்பார் மீண்டும்!
என்ன செய்ய?
இந்தப் பேதை மனது அதையும் நம்புவதுபோல நடிக்கத்தான் போகிறது.
இரவும் வந்து விட்டது. இது வரை அவரைக் காணவில்லை. நல்ல வேளை, இந்த இருட்டிலே வழி காட்ட அந்த நிலவுதான் துணையாக இருக்கிறாள். நிலவே நீ வாழ்க. அவரைக் காணும்வரை நீ மறையாமல் இருப்பாயாக! என்கிறாள்.
விடாஅது சென்றாரைக் கண்ணிணால் காணப்
படாஅதி வாழி மதி. – 1210; - நினைந்தவர் புலம்பல்
மதி வாழி = நிலவே வாழ்க; விடாஅது சென்றாரை = என் நெஞ்சை விட்டு நீங்காமல் நீங்கிச் சென்றுள்ளவரை; கண்ணிணால் காணப்படாஅதி = கண்ணினால் காணும்வரை நீ மறையாது ஒழிவாயாக!
நிலவே வாழ்க! என் நெஞ்சை விட்டு நீங்காமல் நீங்கிச் சென்றுள்ளவரைக் கண்ணினால் காணும்வரை நீ மறையாது ஒழிவாயாக!
மனம் எந்த நிலையில் இருக்கிறதோ அவ்வாறே வார்த்தைகளும் வெளிப்படும்.
அவள் சொல்ல நினைத்தது:
அவரை நான் காணுமளவும் உன் ஒளியை உமிழ்ந்து கொண்டு இருக்கப் போகும் நிலவே நீ வாழ்க என்பதை!
இருப்பினும், அவளின் மனத்தில் இருந்த அந்தச் சந்தேக உணர்வு, நிலவே வாழி என்றாலும் கூட “காணப்படாது ஒழிவாயாக” என்று எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்த வைக்கிறது.
ஆனால், மணக்கூடவப் பெருமான் வேறு மாதிரி விளக்குகிறார்.
நிலவே நீ ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு இருக்கும்வரை என்னவரைக் கண்ணிணால் காண முடியாது. ஆகையினால் நீ மறைந்தால் நான் உறங்குவேன், கணவிலாவது என்னால் அவரைக் காணமுடியும் என்கிறார்.
மணக்குடவப் பெருமான் உரை: என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. (இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.)
மணக்குடவப் பெருமான் உரைக்கு “வாழி” என்பது அசைச் சொல். பொருளில்லை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments