27/01/2024 (1057)
அன்பிற்கினியவர்களுக்கு:
நிலையாமையை அடுத்துத் துறவு என்னும் அதிகாரம். இதில் முதல் பாடல் நாம் பல முறை சிந்தித்த பாடல்தான். காண்க 28/02/2021. மீள்பார்வைக்காக:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். - 341; துறவு
எந்த எந்தப் பொருள்களிலிருந்து ஆசையை நீக்குகிறோமோ அந்த அந்தப் பொருள்களால் வரும் துன்பம் இல்லை.
சரி, அவ்வாறு கொஞ்சமாக கொஞ்சமாகத் துறந்தால் என்ன ஆகும்?
இன்பம் உண்டாகும்.
நம்மாளு: என்ன இன்பமா?
ஆம். ஒன்றின் மேல் விருப்பம் வைத்தால்தான் அதன்பின் அலைய நேரிடும். அதனால் அறப்பிறழ்வுகளுக்கும் இடம் கொடுக்க நேரிடும். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை போன்றன இல்லாமல் போகும்!
இதனால், எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாகப் பற்றுகளில் இருந்து நீங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு, புத்த பெருமான் சொன்னது போல், முக்திக்கு முந்திக் கொள்கிறோம் என்று பொருள்.
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல. – 342; - துறவு
வேண்டின் உண்டாகத் துறக்க = துன்பம் இல்லாத நிலை வேண்டின் பற்றுகளை நீக்குக; துறந்த பின் ஈண்டு இயற்பால பல = துறந்த பின் இங்கு கிடைக்கும் இன்பங்கள் பல.
துன்பம் இல்லாத நிலை வேண்டின் பற்றுகளை நீக்குக. துறந்த பின் இங்கு கிடைக்கும் இன்பங்கள் பல.
உங்கள் அருகில் முன்பின் அறிமுகமில்லா ஓர் அழகிய பெண்ணோ, ஆணோ எந்தவித கூச்சமின்றி வந்து அமர்ந்தால் ஒரு வேளை உங்களுக்கு வயதாகிவிட்டது எனலாம். அமர்ந்தவர்கள் தொடர்ந்து அமர்ந்திருந்தால் நீங்கள் ஒரு பற்றினை விட்டவர்கள் என்று பொருள்!
பற்றுகளை விட விட உங்கள் மேல் அனைத்து உயிர்களும் அன்பு செலுத்துவதைக் காணலாம்.
ஓர் ஊரில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தாராம். அவர் எப்போது அமர்ந்தாலும் அவர் மேல் பல பறவைகள் வந்து அமர்ந்து கொள்ளுமாம். இவர் தன்மட்டில் தன் வேலையைப் பார்ப்பாராம். அந்த ஊர் குழந்தைகளும் அவருடன் ஆசையாய் பழகுவார்களாம்.
ஒரு நாள், சிறுவர்களில் ஒருவன் தாத்தா எனக்கு ஒரு பறவையை பிடித்துத் தரமுடியுமா என்றானாம். அதற்கு அந்தத் துறவி, தம்பி அது தப்பு என்றாராம். அந்தச் சிறுவனோ விடுவதாக இல்லை. ரொம்ப கெஞ்சினானாம். நான் அந்தப் பறவைக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கமாட்டேன். அதனை உடனே விட்டுவிடுவேன் என்றானாம். அந்தத் துறவியும் மனமிரங்கி நீ நாளை காலை சீக்கிரமாக வா, பிடித்துத் தருகிறேன். ஆனால், நீ அதனை உடனே விட்டுவிட வேண்டும் என்றாராம். அவனும் மறுநாள் காலை வந்தானாம், இவரும் வெளியில் வந்து அமர்ந்தாராம். ஆனால், ஒரு பறவையும் அவரின் அருகில் வரவில்லையாம்! துறவிகள் தவறும் இடம் இதுவே!
அனைத்து உயிர்களின் மனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நம் மனத்தில் உள்ள அழுக்குகள் மற்றவர்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும். பற்றுகளை விடுங்கள். அங்கு அன்பும் அருளும் தழைக்கும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments