11/09/2023 (919)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனைஉன் கோயில் வாயிலிற்
பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்
குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர்
நச்சு மாமர மாயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.” --- பாடல் 96; திருச்சதகம்; திருவாசகம்; மாணிக்கவாசகப் பெருமான்.
எல்லா உலகங்களையும் வித்தில்லாமல் தோற்றுவிப்பாய்; என்னை உன் கோயில் வாயிலில் பித்தனாக்கி, உன் அன்பரது திருப்பணிக்கு உரியேனாகச் செய்தாய்; உலகத்தார், தாம் வளர்த்தது நச்சு மரம் என்று தெரிந்தாலும் பாசத்தினால் அதனை வெட்டார்; அடியேனும் உனக்கு அப்படியே! என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
நான் மோசமானவன் தான் என்றாலும் நேரடிக் காரணங்களால் என்னைத் தள்ளாமல் இன்ன பிற காரணங்களைக் கற்பித்து என்னை ஏற்றுக் கொள் என்கிறார்.
அஃதாவது, பல நிகழ்வுகளுக்கு நேரடி காரணங்களைக் கண்டறிய முடியாது. இன்ன பிற காரணங்களால் காரியங்கள் நிகழும். இதுதான் இயற்கையின் இயல்பு.
“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.” என்பது பழமொழி. வித்து இல்லாமலேயும் விளையும்!
வித்து இல்லாமல் விளையுமா? இது பகுத்தறிவிற்கு ஒவ்வாதே? என்றெல்லாம் வினாக்களை எழுப்பலாம்.
இங்கே ‘விளையும்’ என்பதற்குப் பொருள் ‘உங்களிடம் வந்து சேரும்’. அஃதாவது, உங்களுக்குத் தேவையான விளைச்சல் உங்கள் வீடு தேடி வரும்!
சரி, இதெல்லாம் எதற்கு இப்போது என்கிறீர்களா? நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால் விருந்தினர்களுக்கு உணவளித்துவிட்டு மீதம் இருப்பதை உண்பவனுக்கு, வித்து இட்டுதான் விளைச்சல் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்காது என்கிறார்.
“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.” --- குறள் 85; அதிகாரம் – விருந்தோம்பல்
மிச்சில் =மிஞ்சியது, எஞ்சியது; மிசைவான் = உண்பவன்; கொல் என்பது அசை நிலை – பொருள் இல்லை;
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் = விருந்தினர்களுக்கு உணவளித்துவிட்டு மீதம் இருப்பதை உண்பவன் இருக்கும் இடத்தில்;
வித்தும் இடல் வேண்டுமோ =அவன் வித்திட்டுதான் விளைவிக்க வேண்டுமா? வேண்டா.
விருந்தினர்களுக்கு உணவளித்துவிட்டு மீதம் இருப்பதை உண்பவன் இருக்கும் இடத்தில் அவன் வித்திட்டுதான் விளைவிக்க வேண்டுமா? வேண்டா.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários