16/03/2023 (742)
“வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.” --- குறள் 612; அதிகாரம் -ஆள்வினை உடைமை
இந்தக் குறள் ஒரு வித்தியாசமான குறளாக உள்ளது. ஏன் என்று சற்று நேரத்தில் பார்ப்போம்.
முரண்பட்ட பொருள்களைத் தரும் சொற்களை Contronym என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். உதாரணம் – Overlook. காண்க 13/01/2022 (322) மீள்பார்வைக்காக:
நாம் அப்போது ‘ஓம்பல்’ என்ற சொல்லைப் பார்த்தோம். ஓம்பல் என்பதற்கு போற்றுதல், பாதுகாத்தல், செய்தல் என்ற வகையில் பொருள் இருந்தாலும் தவிர்த்தல், விலக்கல் என்ற பொருளும் இருப்பதைப் பார்த்தோம்.
ஆகவே, இந்த 612 ஆவது குறளில் வரும் ‘ஓம்பல்’ விலக்கல், தவிர் என்று பல அறிஞர் பெருமக்கள் உரை கண்டுள்ளார்கள்.
வினைக்கண் வினை கெடல் ஓம்பல் = ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்போது அச்செயல் தடம் மாறுவதை தவிர்
மணக்குடவப் பெருமான்: வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க.
பரிமேலழகப் பெருமான்: செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக.
அறிஞர் மு.வரதராசனார்: தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
ஆனால், பரிதியார் என்னும் பழம் உரை அறிஞர் “வினைக்கண் வினை கெடல் ஓம்பல்” = “ஒரு காரியத்தை எடுத்தால் அந்தக் காரியம் குறையாமல் முடிப்பான்” என்கிறார்.
அதாவது “வினை கெடல்” என்பதற்கு அச் “செயலின் முடிவு” என்று பொருள் கொண்டு பொருள் சொல்கிறார். ஓம்பல் என்பதற்கு போற்றுதல் எனும் நேர்மறைப் பொருளைச் சொல்லிச் சென்றுள்ளார்.
அடுத்த சிக்கல், “வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” என்பதில் இருக்கிறது.
வினைக்குறை என்றால் என்ன? சில அறிஞர் பெருமக்கள் இதற்கு வினையாகிய குறை என்கிறார்கள். இங்கே ‘குறை’ என்பதும் Contronym ஆக அதாவது “குறை” என்பதற்கு “இன்றியமையாப் பொருள்” என்று நேர்மறையான பொருள் சொல்கிறார்கள்.
குறை என்றால் நாம் பொதுவழக்கில் குற்றம், தவறு என்ற வகையில் எதிர்மறை பொருள் காண்கின்றோம்.
அடுத்து, “தீர்ந்தார்”!
குறை தீர்ந்தார் என்றால் குறையினின்று நீங்கியவர் என்று பொருள் வழக்கு இருக்கிறது. இந்தப் பொருளில் மணக்குடவப் பெருமான் வினைக் குறையை முடித்தார் என்கிறார்.
ஆனால், பரிமேலழகப் பெருமான் வினையாகிய இன்றியமையாப் பொருளைச் (குறை) செய்யாது விட்டார் என்கிறார்.
இதோடு முடியவில்லை சிக்கல். அடுத்து “தீர்ந்தன்று உலகு”. இதற்கு “உலகு கைவிடும்” என்று பரிமேலழகப் பெருமான் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும், உலகு கைவிடாது இயங்கும் என்று மணக்குடவப் பெருமான் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும் இரு வேறாகப் பொருள் காண்கின்றார்கள்!
அதுவெல்லாம் சரி, இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்கிறீர்களா?
“இப்ப என்ன ஒன்னு நான் சொல்றது” என்ற நமது வைகைப் புயல் வடிவேலு பாணியில் இருக்கிறேன்!
ஓரு உரை: அரை கிணறு தாண்டாதே; உலகம் உன்னைக் கைவிடும்.
வேறு உரை: வெட்டிக்கொண்டுவா என்றால் வேரோடு கொண்டுவா! உலகம் உன்னை தொடர்ந்து போற்றும்.
இரண்டுமே ஒரு பொருளை நோக்கித்தான் செல்கின்றது! எதிரிலே தடை இருப்பின், இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லுங்கள் அதுதான் ஆள் வினை உடைமை.
நம் பேராசானின் கெட்டித்தனம்தான் இங்கே வெளிப்படுகிறது. ஆக மொத்தம் சென்று கொண்டிருங்கள். சோம்பலைத் தவிருங்கள்; விதிக்கப் பட்டச் செயலைச் செய்து கொண்டிருங்கள்.
விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல் அறம்!
அச்செயலையும் அரைகுறையாகச் செய்யாதே!
மறுமடியும் ஒரு எட்டு எட்டி அந்தக் குறளை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com
Comentarios