28/12/2022 (664)
“கோல்நோக்கி வாழுங் குடியெல்லாம்; தாய்முலைப்
பால்நோக்கி வாழுங் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம்; உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.” --- பாடல் 29, நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் பெருமான்
தலைமையின் நடுவு நிலை தவறாத செங்கோலைப் பார்த்து மன எழுச்சியுறுவர் மக்கள்;
தாய்ப்பால் நோக்கி வாழும் குழந்தைகள்;
வான் மழை நோக்கி வாழும் உலகம்;
இப்படி சொல்லிக்கொண்டே வந்த விளம்பி நாகனார் பெருமான், என்ன நினைத்தாரோ, நிலையாமையைச் சொல்லி முடிக்கிறார் இவ்வாறு:
உயிர்களின் அழிவை நோக்கி இன்புறும் காலன்/எமன்/கூற்றுவன் என்கிறார்.
சரி, இந்தப்பாடல் எதற்கு என்றால், விளம்பி நாகனார் பெருமான், நம் பேராசானின் பாடலை அப்படியே உள்வாங்கிக் கொண்டு இந்தப் பாடலைச் சமைத்துள்ளார்.
“வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி.” --- குறள் 542; அதிகாரம் – செங்கோன்மை
உலகெல்லாம் = உலகில் வாழும் உயிர்கள் எல்லாம்; வான் நோக்கி வாழும் = வானில் இருந்து விழும் மழையை நோக்கி வாழும்;
குடி (எல்லாம்) மன்னவன் கோல் நோக்கி வாழும் = தலைவனைச் சார்ந்திருக்கும் குடிகள் எல்லாம் அவனின் நடுவு நிலைமை தவறா ஆட்சி முறையை நோக்கி வாழும்.
வானில் இருந்து விழும் மழை பாரபட்சம் பார்ப்பதில்லை; அதுபோல தலைவர்களும் இருக்க வேண்டும் என்பதனால் மழையை உவமையாக்கினார்.
அஃதாவது, செங்கோன்மை என்பது பாரபட்சமின்றி ஆட்சி புரிவது. அப்படி ஆட்சி புரிந்தால் மக்கள் யாவரும் மன எழுச்சி பெற்று அவர், அவர் செயல்களை முனைப்புடன் செய்வர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
留言