08/09/2023 (916)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
தமிழின வரலாற்றில் முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று மூன்று சங்கங்கள் இருந்தன என்பதனை “இறையனார் களவியல்” என்ற சங்க கால நூலுக்கு உரை எழுதிய நக்கீரப் பெருமானார் அவரது உரையில் தெரிவிக்கிறார்.
நக்கீரப் பெருமானார் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று குறிக்கிறார்கள்.
குமரிக்கண்டத்திலிருந்த தென் மதுரையில் முதற் சங்கம் இருந்தது என்றும் அந்தச் சங்கம் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சி உடையது என்றும் குறிக்கிறார்கள். அகத்தியம் என்னும் இலக்கண நூல் அந்தக் காலத்தில் இருந்தது என்றும் குறிக்கிறார்கள்.
பின்னாளில் குமரிக் கண்டம் கடல்கோளுக்கு உள்ளானதால் கபாடபுரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட பாண்டி நாட்டில் இடைச் சங்கம் நிறுவப்பட்டதாம். இந்தச் சங்கமும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கலாம் என்கிறார்கள். அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
கபாட புரத்தையும் கடல் கொண்டதனால் தற்போதைய மதுரை என்று வழங்கப் பெறும் வட மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டி நாட்டில் கடைச் சங்கம் நிறுவப்பட்டு பல நூற்றாண்டுகள் செயல்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
மேற்கண்ட இந்தச் செய்திகளை இறையனார் களவியல் உரையிலிருந்து அறியலாம். கடைச் சங்க காலம் கி.மு. 400 முதல் கி.பி. 200 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. இந்தக் காலத்தைச் சேர்ந்த நூல்கள்தாம் நமக்கு கிடைத்திருப்பன.
சரி, இப்போது இது எதற்கு என்கிறீர்களா? இளம் பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் ஒரு பாடலை இயற்றியுள்ளார். அந்தப் பாடலில் நம் பேராசானின் திருக்குறள் கருத்துகளை சிலவற்றைத் தொகுத்துள்ளார். ஆகையினால் நம் இளம் பெரும் வழுதியை வரவேற்போம். ஆமாம், அவரையே கடல் கொண்டு விட்டதாம் ஒரு கடல் பயணத்தில்! ஆகையினால் அவர் “கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி” என்று வழங்கப் பெறுகிறார்.
“உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே.” ---பாடல் 182; புறநானூறு
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலர் முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சித்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடனும் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே
இந்திரர்க்குரிய அமிழ்தமே கிடைத்தாலும் அதனை, ஆகா, கிடைத்துவிட்டதே என்று யாரும் தனியாக அருந்தமாட்டார்கள்; யாரோடும் வெறுப்பும் கொள்ளவும் மாட்டார்கள், வெறுக்கும் படியும் நடக்க மாட்டார்கள்; பிறர் அஞ்சத்தகும் செயல்களுக்குத் தாமும் அஞ்சி அதனை நீக்கும் பொருட்டு தூங்கவும் மாட்டார்கள்; தம் குடிக்குப் புகழ் கிடைக்குமெனின் தம் உயிரையும் கொடுப்பவர்கள்; பழி வரும் ஆனால் அதற்கு ஈடாக இந்த உலகம் முழுவது எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதனைப் புறந்தள்ளுவார்கள்; மனத்தில் சலனமில்லாதவர்கள்; இத்தகைய சிறப்புடையவர்கள் தன்னை முன்னிறுத்த முயலாது பிறரைத் தூக்கிவிட எப்போதும் முயலுபவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது அம்மா! என்கிறார் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி.
அமிழ்தமே கிடைத்தாலும் யாரும் தனியாக அருந்தமாட்டார்கள் என்ற கருத்தினை நம் பேராசானின் குறளில் காணலாம்.
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.” --- குறள் 82; அதிகாரம் – விருந்து ஓம்பல்
சாவா மருந்து எனினும் = அமிழ்தமே என்றாலும்; விருந்து புறத்ததாத் தான் உண்டல் = நம்மைத் தேடிவந்த விருந்தினர்களுடன் பகிர்ந்து உண்ணாமல் அவர்களை வெளியே காத்திருக்க வைத்துவிட்டு தான் மட்டுமே உண்ணுதல்; வேண்டற் பாற்று அன்று = விரும்பத்தக்கது அன்று.
அமிழ்தமே என்றாலும் நம்மைத் தேடிவந்த விருந்தினர்களுடன் பகிர்ந்து உண்ணாமல் அவர்களை வெளியே காத்திருக்க வைத்துவிட்டு தான் மட்டுமே உண்ணுதல் விரும்பத்தக்கது அன்று.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments