10/12/2022 (646)
‘வாரி’ என்றால் யானை, வருவாய், விளைச்சல், நெடுங்கம்பு, கடல் ... இப்படி பல பொருள் கொண்ட ஒரு சொல்.
“மலைபடுகடாம்” என்பது ஒரு சங்க கால நூல். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. 583 வரிகளைக் கொண்ட நீண்டதொரு பாடல். அதில்
“...வாரி கொள்ளா வரை மருள் வேழம் ...” என்று 572 ஆவது வரியில் வருகிறது.
அதாவது, யானைகளைப் பிடிக்கும் இடத்திற்குச் சென்று பிடிக்காமல் பகைவர்களின் படைகளை ஒடுக்கி, பெற்ற யானைகளை வைத்திருப்பவனே ... என்று சொல்கிறார். வாரி என்றாலும், வேழம் என்றாலும் யானைதான்!
திருமுருக கிருபானந்த வாரியார் பெருமான் அவர்களின் இயற்பெயர் ‘கிருபானந்த வாரி’. அதாவது, கிருபையும், ஆனந்தமும் நிறைந்த கடல் என்று பொருள். வாரியார் சுவாமிகளுக்கு அவரின் இயற்பெயர் எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது!
“Mr. Income safe” எங்கே இருக்கு தெரியுங்களா? அதாங்க, நம்ம திருப்பதியில் இருக்கும் “ஸ்ரீ வாரி உண்டியல்”. ‘வாரி’ என்றால் ‘வருவாய்’.
இது நிற்க.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் இரண்டாம் குறளில் வேலைக்கு ஆளை நியமித்தாகி விட்டதா, உடனே ‘காரியத்தில் கண் வை” என்கிறார்.
அது என்ன காரியம்? வருவாயைப் பெருக்கி எப்படி வளப்படுத்தலாம் என்பதுதான். மேலும், அதற்கு ஏதேனும் தடைகள் இருந்தால் அதனையும் நீக்கும் வகையில் செயல்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்களைச் செய்யுமாறு பணிக்க வேண்டும்.
“வாரிபெருக்கி வளம்படுத்தி உற்றவை
ஆராய்வான் செய்க வினை.” --- குறள் 512; அதிகாரம் – தெரிந்து வினையாடல்
வாரிபெருக்கி வளம்படுத்தி = வருவாயைப் பெருக்கி, வளம் சேர்த்து; உற்றவை = தடைகள்; உற்றவை ஆராய்வான் செய்க வினை = அந்தச் செயல்களுக்குத் தடைகள் ஏதேனும் உள்ளனவா என்று ஆராய்ந்து நீக்கும் திறமை கொண்டவன் செய்யட்டும் செயல்களை!
வருவாயைப் பெருக்கி, வளம் சேர்த்து; அந்தச் செயல்களுக்குத் தடைகள் ஏதேனும் உள்ளனவா என்று ஆராய்ந்து நீக்கும் திறமை கொண்டவன் செய்யட்டும் செயல்களை!
சொல்லாமல் சொன்னது: அதையெல்லாம் தலைமை கவனிக்க வேண்டும் என்பது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments