top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

வெருவந்த செய்தொழுகும் ... 563, 799

21/01/2023 (688)

குறள்களில் ‘கெடும்’ என ஆரம்பிக்கும் குறள் ஒன்றுதான். நாம் அதை முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 02/12/2021 (282).


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்.” --- குறள் 799; அதிகாரம் – நட்பாராய்தல்


கெடும் காலைக் கைவிடுவார் கேண்மை = ஒருவனை கேடு சூழ்ந்து இருக்கும்போது அவனை கைவிடுவாரின் நட்பு; அடும் காலை உள்ளினும் உள்ளம் சுடும் = தன் கடைசிக் காலத்தில் நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும்.


‘கெடும்’ எனும் சொல் மொத்தம் முப்பத்திரண்டு முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘கெடும்’ என முடியும் குறள்கள் இருபத்தி ஒன்பது. அதில் அதிக அளவில், அதாவது, நான்கு குறள்களில் பயன் படுத்தப்பட்டிருக்கும் அதிகாரம் ‘வெருவந்த செய்யாமை’.


அதாவது, ‘வெருவந்த செய்யாமை’ மிக முக்கியம் என்பதற்கு இது ஒரு குறிப்பு.


ஒரு, ஓர் என்பதும் ஒரே பொருள்தரும் சொற்கள். இதையும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 18/12/2021 (298).


பொதுவாக, வரும் சொல்லின் (வருமொழி) முதல் எழுத்து உயிர் மெய் எழுத்தாக இருப்பின் ஒரு என்று சொல்கிறார்கள். உதாரணம் ஒரு குடை, ஒரு பம்பரம்.


வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தில் இருந்தால் ஓர் என்பதைப் பயன்படுத்துகிறார்கள். ஓர் உலகம் என்பதுபோல.


இதைத்தான் ஆங்கிலத்தில் ‘a’ and ‘an’ என்று, இடம் (consonants and vowels) பார்த்து, பயன் படுத்துகிறார்கள். நாம் எல்லா இடங்களிலும் இது போன்று பயன்படுத்துவதில்லை.


தமிழில் ஒரு நுனுக்கம் உள்ளது. பொது, சிறப்பு என்று இரண்டு பயன்பாடுகள் இருக்கின்றன.


ஒரு சொல் என்றால் a word என்று ஆங்கிலத்தில் பொருள்படும். அதே சமயம், ‘ஓர் சொல்’ என்றால் ஒப்பற்றச்சொல் என்று பொருள். இங்கே ‘the word’ என்று (கிட்டத்தட்ட) ஆங்கிலத்தில் பொருள்.


ஆங்கிலப் புரிதல் கொண்டு சிலர் மயக்கமுறுகிறார்கள். கவனிக்கலாம் என்றார் ஆசிரியர்.



சரி ஏன் இந்தச் சொல் ஆராய்ச்சி என்கிறீர்களா?

‘வெருவந்த’ என்றால் ‘அச்சப் படும்படி’ என்று தெரியும்.


‘ஒருவந்தம்’ என்றால் என்ன பொருள்? ‘நிச்சயமாக’, ‘உறுதியாக’ என்று பொருள்.

அதாவது, ‘அது ஒன்று மட்டும்தான் நிச்சயம்’ என்பது போல பொருள்படும்.


வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.” --- குறள் 563; அதிகாரம் – வெருவந்த செய்யாமை


வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்= மக்கள் அச்சப் படும்படி செயல்களைச் செய்யும் கடுமையான தலைமை இருக்குமாயின்;

ஒருவந்தம் ஒல்லைக் கெடும் = (அது) உறுதியாக விரைவில் அழியும்.


மக்கள் அச்சப் படும்படி செயல்களைச் செய்யும் கடுமையான தலைமை இருக்குமாயின், அது உறுதியாக விரைவில் அழியும்.


பொதுவாகவே, யாரையும் அச்சப்படுத்தாமல் நடக்க வேண்டும்!


நேற்று ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அருகில் குழந்தையோடு ஒருவர் உணவருந்தி முடித்துவிட்டு அமர்ந்திருந்தார். அந்தக் குழந்தை விளையாட்டாக அவரை ஒரு தட்டு தட்டியது. அடித்தது என்று சொல்ல மாட்டேன். தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தை அது. அதற்கு, அவர் பொறுமை இழந்து ‘யாரை அடிக்கறே’ என்று சத்தம் (yelling) போட்டு அதனை அடிக்கவும் முற்பட்டார்! இது வன்முறையல்லவா? அவரின் செயல்களுக்கு பல காரணங்களைக் கற்பிக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி: மனதில் கட்டுப்பாடு இல்லை.


குழந்தைகளிடமும், இயலாதவர்களிடமும் வன்முறை என்பது கொடிதிலும் கொடிது.


வெருவந்த செய்யாமை நன்று. அன்பு காட்டுவோம் அனைவரிடமும்!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )




Commentaires


Post: Blog2_Post
bottom of page