03/05/2023 (790)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஊறு என்பதற்கு தடை, துன்பம், இடையூறு என்றெல்லாம் பொருள் எடுக்கலாம்.
உறுவது என்றால் உய்த்து உணர்வது அதாவது அனுபவம் என்று பொருள். உறுவது என்பது பொருள்களைப் பெறுவது என்றும் பொருள்.
உறுவது ஊறு. உறுதல் – தொழிற்பெயர்; உறு – முதனிலைத் தொழிற்பெயர்; ஊறு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்.
எனவே, ஊறு என்றச் சொல் நல்லதொரு அனுபவத்தையும் குறிக்கும்.
ஆகவே, ஊறு என்றச் சொல்லும் முரண் பட்டப் பொருள்களைத் தரும் ஒரு சொல்தான் (Contronym). Contronyms குறித்து காண்க 13/01/2022 (322).
அதே போன்று, மாண்டார் என்றச் சொல்லும்! மாண்டார் என்றால் மறைந்துவிட்டார் என்றும் பொருள்; மாட்சிமை அடைந்தவர், அதாவது, உயர்ந்து நிற்பவர் என்றும் பொருள்.
வீறு என்றால் சிறப்பு, பெருமை, கம்பீரம், சத்தி(சக்தி), வீறாப்பு, கிளர்ச்சி என்றெல்லாம் பொருள் சொல்லலாம்.
சிறப்பாகச் செயல்பட்டு வினைகளைச் செய்து முடிப்பவர்களை யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும், அந்தத் தலைமைக்கு ஒரு சிக்கல் வந்து அந்தச் சிக்கலைத் தவிடு பொடியாக்கிய அமைச்சனை அந்த அரசன் எண்ணி எண்ணி பாராட்டுவது இயல்புதானே!
“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.” --- குறள் 665; அதிகாரம் – வினைத்திட்பம்
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் = எண்ணத்தாலும் செயலாலும் செயல்களைச் செவ்வனேச் செய்து முடித்து, சிறப்பு பெற்று, உயர்ந்து நிற்பவர்களின் வினைத்திட்பம்;
வேந்தன்கண் = அரசர்களிடம், தலைமையிடம்; ஊறெய்தி = சிறந்த அனுபவங்களை ஏற்படுத்தலால்; உள்ளப்படும் = அது ஆழ்ந்து எண்ணி நினைக்கப்படும், பாராட்டப்படும்.
எண்ணத்தாலும் செயலாலும் செயல்களைச் செவ்வனேச் செய்து முடித்து, அதனால் சிறப்பு பெற்று, உயர்ந்து நிற்பவர்களின் வினைத்திட்பம் தலைமையிடம்சிறந்த அனுபவங்களை ஏற்படுத்தலால், அச் செயல்களைச் செய்தவர்கள், ஆழ்ந்து எண்ணி நினைக்கப்படுவார்கள், பாராட்டப்படுவார்கள்.
இது நிற்க. சிறந்த தமிழ் அறிஞரான தமிழண்ணல் அவர்கள் இந்தக் குறளுக்கு இவ்வாறு உரை காணுகின்றார்:
“மற்றவர்க்கில்லாத பெருஞ்சிறப்பைப் பெற்று, மாட்சிமைப்பட்டவர் என்று கூறப்படும் அமைச்சர்களது செயல்திட்பம் எப்போது தெரியவரும் என்றால், தமது வேந்தர்களுக்கு ஓர் இடையூறு ஏற்பட்டபோது, அதை அவர்கள் தீர்க்கும் விதத்தைப் பார்த்து மதிக்கப்படும்.”
“ஊறு எய்தி” என்பதற்கு “இடையூறு ஏற்பட்டபோது” என்று பொருள் காண்கின்றார் மூதறிஞர் தமிழண்ணல்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments