07/06/2023 (825)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“...வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
...
கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே ...” --- பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ வன்முறைக்கு அச்சாரமா என்று கேட்க வேண்டாம்.
அநீதி எங்கெல்லாம் இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பரமாத்மா தன் சங்கு சக்கரங்களோடு தோன்றி அழிப்பார்.
கொடுங்கோல் மன்னர்களையும், சர்வாதிகாரிகளையும் வீழ்த்தி மக்களாட்சி உலகெங்கும் நடைபெறுவதைக் காண்கிறோம்.
வாளுக்கு வாள்; தோளுக்குத் தோள். இதுதான் உலக நிலை. வன்முறைக்கு வித்திடவில்லை என்றாலும், நாம், நமது பாதுகாப்பிற்காக இராணுவங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லையா?
இராணுவத்தில் இணைந்த வீரன் ஒருவனுக்குப் பகைவனைத் தாக்கி அழித்தலில் உடன்பாடில்லை என்றால் அவனுக்குப் போர் பயிற்சி எதற்கு?
வலிமையும் வீரமும் இல்லாதவனுக்கு வாளோடு என்ன தொடர்பு?
அது போல, கற்றறிந்த அவையினில் பேச அஞ்சுபவனுக்கு நூல்களோடு என்ன தொடர்பு?
அவன் கற்றதும் கல்லாததும் ஒன்றுதானே? கற்றவன் என்றாலே அவைக்கு அஞ்சாமல் பேச வேண்டும் என்கிறார் நம் பேராசான்.
“வாளோடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.” --- குறள் 726; அதிகாரம் – அவையஞ்சாமை
வன்கண்ணர் அல்லார்க்கு வாளோடு என் = வலிமையும் வீரமும் இல்லாதவர்க்கு வாளோடு என்ன தொடர்பு;
நுண் அவை அஞ்சு பவர்க்கு நூலொடு என் = கற்றறிந்த அவையினில் பேச அஞ்சுபவர்க்கு நூல்களோடு என்ன தொடர்பு?
கற்ற நூல்களும், பெற்ற பயிற்சிகளும் நம்மையும், நாட்டினையும் உயர்த்த வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios