top of page
Search

விளக்கற்றம் பார்க்கும் ... 1186, 1187, 1188, 04/03/2024

04/03/2024 (1094)

அன்பிற்கினியவர்களுக்கு:

அவர் பிரிந்தால் என் மீது பசப்பு படர்கிறது என்றாள். இதுதான் இப்போதைக்கு இயல்பாகவே (new normal) இருக்கிறது என்கிறாள்.

 

விளக்கு அணைந்தால் எப்படி இருள் சூழ்ந்து கொள்ளுமோ அதுபோல என்னவர் பிரிந்தால் உடனே வந்து சூழப் பார்க்கிறது இந்தப் பசப்பு என்கிறாள்.

 

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. – 1186; - பசப்புறு பருவரல்

 

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் = விளக்கு அணைய காத்திருக்கும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு = என்னவர் எப்போது விலகுவார் என்று காத்திருக்கும் பசப்பு.

 

விளக்கு அணைய காத்திருக்கும் இருளே போல், என்னவர் எப்போது விலகுவார் என்று காத்திருக்கும் பசப்பு.

 

காரணம் அவன் பிரிந்ததுதான். இந்தப் பசப்பின் தாக்குதலை இயல்பாக மாற்றி ஆறுதல் அடைய முயல்கிறாள்.

 

மனம் பல சமயம் உண்மையை (reality) மறுத்து (fake) அமைதியைத் தேட முயலும்.  இதுவும் ஒரு மனவியல் மருந்துதான். மருந்தைப் போலப் பயன்படுத்தினால் பயன் உண்டு. அந்த மறுப்பிலேயே மயங்கிப் போவதுதான் மனப் பிறழ்வு. நம் பேராசான், எப்படி முடித்து வைக்கிறார் என்று பார்ப்போம்.

 

அவருடன் கூடிக் கிடந்தேன். கொஞ்சம் அப்படி நகர்ந்தேன். அவ்வளவே, அந்த இடைப்பட்ட நேரத்தில் என்னை அள்ளிக் கொண்டதே பசப்பு என்கிறாள்.

 

அஃதாவது, இந்தப் பாடலில் பசப்பின் தீவிரத்தைத் தீவிரமாக்குகிறாள். எப்போதும் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற மன ஓட்டத்தை வெளிப்படுத்துகிறாள். மனம் மயங்க அறிவு ஓய்வெடுத்துக் கொள்ளும்.

 

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு. – 1187; - பசப்புறு பருவரல்

 

புல்லி = தழுவி; புல்லிக் கிடந்தேன் = தழுவிக் கிடந்தேன்; புடை பெயர்ந்தேன் = கொஞ்சம் அவரைவிட்டு நகர்ந்தேன்; பசப்பு அவ்வளவில் அள்ளிக் கொள்வற்றே = பசப்பானது அந்த இடைப்பட்ட நேரத்தில் என்னைத் தாக்கியதே.

 

தழுவிக் கிடந்தேன். கொஞ்சம் அவரைவிட்டு நகர்ந்தேன். பசப்பானது அந்த இடைப்பட்ட நேரத்தில் என்னைத் தாக்கியதே.

 

கவித்துவமானப் பாடல்!

 

அடுத்து உண்மைக்குத் திரும்புகிறாள்.  நான் பசலையால் தாக்கப் பட்டுள்ளேன் என்கிறார்கள். ஆனால், அதற்கான காரணத்தைச் சொல்ல மறுக்கிறார்கள் என்கிறாள்.

 

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்

துறந்தார் அவரென்பார் இல். – 1188; - பசப்புறு பருவரல்

 

இவள் பசந்தாள் என்பது அல்லால் = இவளின் மனம் அமைதியடையாமல் பசலையால் துன்பப்படுகிறாள் என்று என்னைப் பழிக்கிறார்கள் பலர்;

இவளை அவர் துறந்தார் என்பார் இல் = ஆனால், இவளைவிட்டு அவர் பிரிந்து சென்றதனால்தான் இவள் இப்பாடுபடுகிறாள் என்பதனைச் செல்பவர்கள்தாம் யாரும் இல்லை.

 

இவளின் மனம் அமைதியடையாமல் பசலையால் துன்பப்படுகிறாள் என்று என்னைப் பழிக்கிறார்கள் பலர். ஆனால், இவளைவிட்டு அவர் பிரிந்து சென்றதனால்தான் இவள் இப்பாடுபடுகிறாள் என்பதனைச் செல்பவர்கள்தாம் யாரும் இல்லை.

 

அவர்தானே காரணம்! அவரைக் கடிந்து கொள்ளாமல் என்னைப் பழிப்பது ஏன் என்று தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறாள். அவரைக் கடிந்தால் விடுவாளா?

 

மனத்தின் ஊசலை இப்படியும் அப்படியுமாகப் படம் பிடிக்கிறார் நம் பேராசான். கற்பனைக் கருவூலம் அவர்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page