14/04/2024 (1135)
அன்பிற்கினியவர்களுக்கு:
வயின் என்றால் இடம் என்று பொருள். பொருள்வயின் பிரிதல் என்றால் பொருள் இருக்கும் இடத்தை நோக்கிப் பிரிந்து செல்லுதல்.
பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே … தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 979, புலவர் வெற்றியழகனார் உரை.
பொருளைத் தேடுவதற்காகப் பிரியும் பிரிவு அவர்களுக்கு உரியதாகும். (அவர்கள் என்றால் வணிகர்க்கும் வேளார்க்கும். இதனை இந்தப் பாடலுக்கு முன் உள்ள பாடலில் சொல்லியுள்ளார்.)
அவர்வயின் என்பது பன்மை சுட்டு.
விதும்பல் என்றால் விரும்புதல்.
அவர்கள் பிரிந்து சில காலம் ஆகிவிட்டது. அவளுக்குப் பித்துப் பிடிப்பது போல இருப்பதைச் சொன்னாள். அவனின் நிலையும் அவ்வாறே.
காலம் கனிந்து வருகிறது. இந்தத் தருணத்தில், அவர்கள் இணைவதை இருவரும் விரும்புகிறார்கள். எனவே, நம் பேராசான், நிறை அழிதலுக்குப் பின் அவர்வயின் விதும்பல் என்னும் அதிகாரத்தை வைக்கிறார்.
அவர்வயின் விதும்பல் என்றால் அவர்கள் இருவரிடமும், காலம் தாழ்த்தாமல், மீண்டும் இணைய வேண்டும் என்ற விருப்பம் மேலெழுவதால் ஒருவரை நோக்கி ஒருவர் விரைதல் என்று பொருள்.
அவர் என்ற சொல் பன்மையைக் குறிக்கிறது.
அவர் என்ற சொல் அவனைக் குறிக்கிறது என்றும், அவனைச் சேர்வதை அவள் விரும்புகிறாள் என்றும் அறிஞர் பெருமக்கள் சிலர் உரை சொல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் மண் சுவற்றில் கணக்கு எழுதுவார்கள். அஃதாவது, ஒன்று ஒன்றாகக் கோடு கிழித்து வைப்பார்கள், பின்னர் அவற்றைக் கூட்டி மொத்தம் எவ்வளவு என்று கணக்கிடுவார்கள்.
வெண்ணிலா கபடிகுழு (2009) என்னும் திரைப்படத்தில், பரோட்டா சூரி, பரோட்டா சாப்பிடும் பந்தயத்திற்குச் சுவரில் கோடு கிழித்து என்ணுவார்களே அதுபோல!
அதுபோல, அவர்கள் இருவரும் தாங்கள் பிரிந்திருக்கும் நாள்களைக் கணக்கு வைத்துக் கொள்ள சுவரில் குறித்து வைக்கிறார்களாம். வளரும் அந்த நாள்களைத் தினமும் எழுதி, எழுதி, அவற்றை ஒவ்வொரு கணமும் தொட்டுத் தொட்டுக் கணக்கிட்டு அவர்கள் விரல்களே தேய்ந்து போய்விட்டதாம்.
அதுமட்டுமல்ல, அவர்கள் இருவர்க்கும், ஒருவர் இருக்கும் திசையை மற்றவர் நோக்கி நோக்கி அவர்கள் இருவரின் கண்களும் பூத்துப் போய்விட்டனவாம்!
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். – 1261; - அவர்வயின் விதும்பல்
வாள் = பெருமை; புற்கென்ற = புல்லியவாயின = பொலிவிழந்தன;
அவர் சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த விரல் = அவர்கள் இருவரும், தாங்கள் பிரிந்து இருக்கும் நாள்களைச் சுவரில் குறித்து, அவற்றை எப்பொழுதும் தொட்டுத் தொட்டு எண்ணிக் கொண்டிருப்பதனால் விரல்களும் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற = ஒருவர் இருக்கும் திசையை மற்றவர் நோக்கி நோக்கி அவர்கள் இருவரின் கண்களும் தம் தனித்துவம் அற்றுப் பொலிவிழந்தன.
அவர்கள் இருவரும், தாங்கள் பிரிந்து இருக்கும் நாள்களைச் சுவரில் குறித்து, அவற்றை எப்பொழுதும் தொட்டுத் தொட்டு எண்ணிக் கொண்டிருப்பதனால் விரல்களும் தேய்ந்தன. ஒருவர் இருக்கும் திசையை மற்றவர் நோக்கி நோக்கி அவர்கள் இருவரின் கண்களும் தம் தனித்துவம் அற்றுப் பொலிவிழந்தன.
அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகள் வருமாறு:
புலவர் புலியூர்க் கேசிகன்: அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களில் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.
புலவர் நன்னன்: தலைவர் பிரிந்து சென்ற நாள்களைக் குறிக்கச் சுவரில் கீறிய கோடுகளைத் தொட்டு எண்ணி எண்ணி விரல்கள் தேய்ந்தன; வரவை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கண்களும் ஒளியிழந்தன.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments