top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

விழித்தகண் வேல்கொண்டு ... 775, 776

25/07/2023 (873)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

தன் மார்பினில் தைத்த வேலைக் கொண்டும் போரிடுவோம் என்றான் அந்த வீரன்.

அதற்குப் பதில் தரும் விதமாக, இந்தப் பக்கமிருந்து:

வீரனே கவனித்தாயா? அந்த வேல் உன் மார்பினில் தைக்கும்போது நீ கண் சிமிட்டிவிட்டாய் போலும்! அதுதான் ஒரு கண நேரம் தவித்துவிட்டாய்!

பகைவனைச் சினந்து நோக்கிய கண், அந்தப் பகைவன் வேலைக் கொண்டு எறியும் போது கண நேரம் மூடித் திறந்தாலும் அது அந்த வீரனுக்கு இழுக்கு. அச்செயல் புறங்காட்டலுக்குச் சமம்.


விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு.” --- குறள் 775; அதிகாரம் – படைச் செருக்கு


ஒட்டு = தாழ்வு, அற்பம், புறங்காட்டல்


விழித்த கண் = பகைவனைச் சினந்து நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் = அந்தப் பகைவன் வேலைக் கொண்டு எறியும் போது கண நேரம் மூடித் திறந்தாலும்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ = ஒரு மாவீரனுக்குத் தாழ்வு அன்றோ?


“அழித்து இமைப்பின்” என்றால் “இமையாது இருக்கும் இமைகளின் நிலையை அழித்து, அதாவது மாற்றி, இமைப்பின்” என்று பொருள்.


கண் விழித்தே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். கண் என்றால் கண் மட்டுமல்ல! அனைத்துப் புலன்களும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்!


இதற்கு எதிர் குரல் ... ம்ம்... கொஞ்சம் கடினம்தான்! இருந்தாலும் விடுவானா அந்த வீரன்!


மகிழ்ச்சி, மகிழ்ச்சி வீரனே நன்று சொன்னீர்! ஆனாலும் ஒன்று சொல்வேன்! விரர்கள் வாழ்ந்த நாள்களை எப்படிக் கணக்கிடுவார்கள் தெரியுமா? இதோ சொல்கிறேன்:

ஆண்டுகளைக் கடத்துவதால் அனுபவங்கள் கிடைப்பதில்லை! வேண்டுமானால், வயது ஒன்று கூடும் அவ்வளவே!


வீரனுக்கு விழுப்புண்கள் படாத நாள்கள் அனுபவத்தைக் கூட்டுவதில்லை. அந்த நாட்களை எல்லாம் அவன் வாழ்நாளில் இருந்து கழித்துவிட வேண்டியதுதான்!


விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.” --- குறள் 776; அதிகாரம் – படைச் செருக்கு


தன் நாளை எடுத்து = தான் வாழ்ந்த நாள்களைக் கணக்கெண்ணி எடுத்து; விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் = விழுப்புண் படாத நாள்கள் எல்லாவற்றையும் வீணாக வழுக்கிய நாள்கள் என்று கணக்கிட்டு ஒதுக்கிவிடுவார்கள்.


தான் வாழ்ந்த நாள்களைக் கணக்கெண்ணி எடுத்து விழுப்புண் படாத நாள்கள் எல்லாவற்றையும் வீணாக வழுக்கிய நாள்கள் என்று கணக்கிட்டு ஒதுக்கிவிடுவார்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comentarios


Post: Blog2_Post
bottom of page