27/09/2022 (576)
அவனுக்கு பித்துப் பிடித்தது போல் இருக்கிறது. மோகினி அடித்துவிட்டது என்பார்களே அது போல.
தி.ஜா. அவர்கள் எழுதிய ‘மோகமுள்’ளைப் படித்திருக்கிறிர்களா? இல்லையென்றால் தேடிப்படிக்கவும் நேரமிருப்பின். பேய் எப்படி அடிக்கும் என்று தெரியும். இது நிற்க.
அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டதாம்.
அவளுடன் இணைந்து இருந்தபோது இந்த உடலில் உயிர் இருந்தது தெரிந்தது. இப்போது அவள் என்னருகில் இல்லை. என் உடலிலும் உயிர் இல்லை என்கிறான்.
என் உயிரோடு கலந்தே இருக்கிறாளா என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று அவனின் ஆற்றாமையை காதலின் சிறப்பாக கூறுகிறான்.
இது நிற்க. கொஞ்சமாக தமிழ் இலக்கணம் – எனக்குப் புரிந்தவரை!
தமிழில் ‘ஆய்’ என்ற சொல் பெயர்ச் சொல்லாகவும், வினைச்சொல்லாகவும், உரிச்சொல்லாகவும் வரும்.
‘ஆய்’ என்பது தாய், ஆயர் எனும் பொருளில் பெயர்ச்சொல்லாக வரும்.
‘ஆய்’ என்பது ஆராய், களை, நுட்பமாய் காண் என்ற வகையில் வினைச்சொல்லாக வரும்.
‘ஆய்’ என்பது அழகிய என்ற பொருளில் உரிச்சொல்லாக வரும்.
அது என்ன ‘உரிச்சொல்’ என்று கேட்டால் ஒர் சொல்லை மேலும் விளக்கப் பயன்படும் சொல். ஆங்கிலத்தில் இதனை ‘adjective’ என்பர்.
Good boy – நல்ல பையன். “Good/நல்ல” என்பது உரிச்சொல்.
ஆயிழை =என்றால் அழகிலிருந்து தோன்றியவள். அதாவது ‘அழகின் அழகு’. (இதை ஏற்கனவே பார்த்துள்ளோம்).
ஆயிழை என்பது பெண்ணைக் குறிக்கிறது. அழகிலிருந்து தோன்றிய அழகுப் பெண் என்று பொருள். இங்கே ‘பெண்’ என்பது மறைந்து நிற்கிறது. எனவே இது ஒரு தொகைச் சொல். (தொகை என்றாலே மறைக்கனும்!)
அன்மொழித்தொகை உதாரணம்: தேன்மொழி. தேனைப் போல இனிமையான குரலை உடைய பெண். பெண் என்ற சொல் மறைந்து நிற்கிறது.
தொகைச் சொற்கள் பெரும்பாலும் ஐந்திற்குள் அடங்கிவிடும். அதாவது: வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத் தொகை. (பிரிதொரு சமயம் பார்க்கலாம் என்றார் ஆசிரியர்).
இந்த ஐந்திலும் ‘தேன்மொழி’ அடங்கமாட்டாள். ஆகையினால் இந்தத் தொகைக்கு அல்+மொழி+தொகை = அன்மொழித்தொகை என்று பெயர்.
ஆயிழையும் ஒரு அன்மொழித்தொகைதான்.
இது நிற்க. அவனின் ஆயிழையைப் பற்றி கேட்போம் இப்போது.
“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.” --- குறள் 1124; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
அன்னள் = அடுத்திருப்பவள், இணைந்திருப்பவள்;
வாழ்தல் ஆயிழை உயிர்க்கு அன்னள் = வாழ்தல் என்பது என்னவள் என் உயிரோடு கலந்து இருப்பது;
சாதல் அதற்கு அன்னள் நீங்கும் இடத்து = சாதல் என்பது என் உயிர்க்கு அன்னள் அதாவது என்னவள் என்னை விட்டு விலகுவது.
“அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” வசனம் இந்தக் குறளை வைத்துதான் எழுதியிருப்பார்களோ?
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments