07/03/2024 (1097)
அன்பிற்கினியவர்களுக்கு:
காழில் கனி என்றாள் தோழி. அஃதாவது, மொத்தமாகச் சுவைக்கக் கூடிய கனி. அந்தக் கனிதான் உன்னிடம் இருப்பது என்றாள் தோழி அவளிடம்.
அது என்ன காதலில் மட்டும் எல்லாரும் வீழ்கிறார்கள். வீழ்வார், வீழப் பெற்றவர் என்றே சொல்களைப் போடுகிறார். இல்லறத்தில் எழ வேண்டுமானால் காதலில் விழ வேண்டும் என்கிறாரா?
அதுவும் உண்மைதான்.
அன்புதான் இல்லறத்தின் பண்பு; அறம்தான் இல்லறத்தின் பயன் என்று அடித்துச் சொல்லியிருக்கிறாரே குறள் 45 இல். மீள்பார்வைக்காக:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – 45; - இல்வாழ்க்கை
செம்புலப் பெயனீரார் குறுந்தொகையில் சொல்லியது போல எங்கெங்கோ பிறந்த நெஞ்சங்கள் இரண்டும் இரண்டறக் கலப்பதுதான் இல்லறம் என்றார். காண்க 16/08/2021.
… செம்புலப் பெயல்னீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே - பாடல் 40; குறுந்தொகை
காதலில் வீழ்வார்க்கு இணையாக வீழ்ந்தவர் அளிக்கும் ஆகப் பெரிய கொடை எது தெரியுமா? அஃது அன்புதான் என்கிறாள் தோழி. அதுவும் எது போலத் தெரியுமா உலகில் வாழ்வார்க்கு வானம் மழையைத் தந்து உதவுவது போல என்கிறாள்.
கவலையைவிடு, கண்ணீரைத் துடை என்பது போல இந்தப் பாடல் அமைகிறது.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. – 1192; - தனிப் படர் மிகுதி
அளி = அன்பு; வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி = காதலில் வீழ்வார்க்கு இணையாக வீழ்ந்தவர் அளிக்கும் ஆகப் பெரிய கொடை அன்புதான்; வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் = அஃது, இந்த உலகில் வாழ்வார்க்கு வானம் மழையைத் தந்து உதவுவது போல.
காதலில் வீழ்வார்க்கு இணையாக வீழ்ந்தவர் அளிக்கும் ஆகப் பெரிய கொடை அன்புதான். அஃது, இந்த உலகில் வாழ்வார்க்கு வானம் மழையைத் தந்து உதவுவது போல.
அந்த அன்பைப் பெற்றவள் நீ! என்கிறாள்.
மேலும் சொல்கிறாள். உன் மனத்தை என்னால் படிக்கவும் முடியும். கலங்கியது போல உன் முகம் காட்டினாலும், “அவர் வரட்டும். வந்ததும் நான் எப்படி இன்பத்தில் நனைகிறேன் பார்” என்று உன் மனம் பேசும் செருக்கான வார்த்தைகள் எனக்குக் கேட்கின்றன. அது உண்மைதானே!
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. – 1193; - தனிப் படர் மிகுதி
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே = காதலில் விழுந்தவர்க்கும் இணையாக காதலில் வீழ்த்தப் பட்டவர்க்கும் கிடைப்பது எதுவென்றால்;
வாழுநம் என்னும் செருக்கு = என்ன நிகழ்ந்தாலும், நாங்கள் இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்து காட்டுவோம் என்ற துணிவு.
காதலில் விழுந்தவர்க்கும் இணையாக காதலில் வீழ்த்தப் பட்டவர்க்கும் கிடைப்பது எதுவென்றால், என்ன நிகழ்ந்தாலும், நாங்கள் இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்து காட்டுவோம் என்ற துணிவு.
உன் மனத்தின் எண்ண ஓட்டங்கள் இவ்வாறு இருக்க நீ கலங்குவது ஏனோ? என்கிறாள் தோழி.
இதற்கு அவள் சொல்லும் பதில் என்ன?
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments