10/03/2024 (1100)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவள்: இந்த உலகத்தில் கடினமான நெஞ்சம் யாருக்கு இருக்கிறது தெரியுமா?
தோழி: நீயே சொல். நீ கேட்பதிலிருந்து ஏதோ பொடி வைத்துப் பேசுகிறாய் என்பது புரிகிறது.
அவள்: பொடியுமில்லை, அணிந்து அழகு பார்க்கத் தொடியுமில்லை. அவரிடமிருந்து எந்தக் குறிப்பும் இல்லை. அவர் பிரிந்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்ற கணக்கே மறந்துவிட்டது. இருப்பினும் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே, நான் அல்லவா, இந்த உலகத்தில் கடின நெஞ்சம் கொண்டவள்!
வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். – 1198; - தனிப்படர் மிகுதி
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது = பிரிந்து சென்றுள்ள என் அன்பிற்கினியவரின் வருகை எப்போது என்னும் இனிய செய்தியைக் கேட்காமல் நானும்; உலகத்து வாழ்வாரின் = இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன், இணைந்து உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேனே; வன்கணார் இல் = என்னைப் போலக் கொடிய நெஞ்சுக்காரி யாரும் இருக்க முடியாது.
பிரிந்து சென்றுள்ள என் அன்பிற்கினியவரின் வருகை எப்போது என்னும் இனிய செய்தியைக் கேட்காமல் நானும், இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன், இணைந்து உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேனே, என்னைப் போலக் கொடிய நெஞ்சுக்காரி யாரும் இருக்க முடியாது.
தன்னைத் தானே நொந்து கொள்கிறாள். இது நிற்க.
“சும்மா நச்சாதே” என்று பேச்சு வழக்கில் சொல்வோம். நச்சுவது என்ற சொல் தமிழ்ச் சொல்லாம். நசை என்றால் ஆசை. நச்சுவது என்பது ஆசையால் வரும் ஆர்வக் கோளாறு. இதைத்தான் சும்மா நச்சிட்டு இருக்காதே என்கிறார்கள்! நாம் அவளைப் பின் தொடர்வோம்.
தோழி: நீ கவலையை விடு. அவரைப் போன்றவரை உன் துணையாகப் பெற்றிருப்பது பெருமைக்குரியது. அவர் நல்லவர் …
அவள்: இன்னும், இன்னும் அப்படியே சொல். இந்தப் பேச்சாவது என் காதுகளுக்கு இனிமை சேர்க்கட்டும்.
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்
டிசையும் இனிய செவிக்கு. - 1199; - தனிப்படர் மிகுதி
நசை = ஆசை; நச்சப்படுதல் = விரும்பப்படுதல்; நசைஇயார் நல்கார் எனினும் = நான் அவரை நச, நச என்று நச்சினாலும் அவர் என்னமோ என்னிடம் அன்பு உள்ளவர் போலக் காட்டிக் கொள்வதில்லை என்றாலும்;
அவர் மாட்டு இசையும் இனிய செவிக்கு = அவரைக் குறித்து யாரேனும் புகழ்ந்து பேசினால் என் காதுகளுக்கு அவை இசையாக இனிக்கதான் செய்கின்றன.
நான் அவரை நச, நச என்று நச்சினாலும் அவர் என்னமோ என்னிடம் அன்பு உள்ளவர் போலக் காட்டிக் கொள்வதில்லை என்றாலும் அவரைக் குறித்து யாரேனும் புகழ்ந்து பேசினால் என் காதுகளுக்கு அவை இசையாக இனிக்கதான் செய்கின்றன.
இதுதான் மனது.
தோழி:
… பெண்ணே உன் கண்ணாளன் பிறையேறி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம் விளையாடத் தருவானே …
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு …
அவள்:
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம் … சந்திரலேகா… ஆஆ…
என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்
வான் மழை போல் உயிரில் விழுவான்
தினம் நான் விரும்பும் வகையில் வந்து பொழிவான்
தேன் இதழை இவள் தந்து மாயாது
இனி பார்க்கடலில் அலை என்றும் ஓயாது
வந்து நான் மண்ணிலே
ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு …
ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் புயலில், கவிப் பேரரசு வைரமுத்து கற்பனையில், அனுபமா, சுரேஷ் பீட்டர்ஸ் குரலில், திருடா திருடா (1993) என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். கேட்டு ரசிக்கலாம். இசைப் புயலில் பாடலைக் கூர்ந்து கவனிக்கணும்! இல்லையென்றால் நம்மை இசை அடித்துக் கொண்டு செல்லும்.
குறளை விட்டுதாதீங்க!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires