top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

வகுத்தான் வகுத்த ... குறள் 377

04/05/2022 (432)

முதல் ஆறு குறள்களில் பொருள் சேருவதற்கு ஆகூழ் தேவை என்று நம் பேராசான் சொன்னார். அதுதான் ‘யோகம்’. யோகத்துக்கு மட்டுமல்ல போகத்திற்கும் ஒரு ஊழ் இருக்கனும் என்று தெளிவாக அடுத்த குறளில் எடுத்து உரைக்கிறார்.


சட்டி நிறைய கறிக்குழம்பு இருந்தாலும் அந்தக் குழம்பின் சுவை, அந்த சுட்ட சட்டிக்குத் தெரியுமோ? இல்லை, அதை எடுத்துப் போடும் கரண்டிக்குத்தான் தெரியுமா?


நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?” --- பாடல் 520; சிவவாக்கிய சித்தர்.

சட்டுவம் = அகப்பை, கரண்டி.


நாதனும், நாதமும் நமக்கு உள்ளிருக்கையில், அதாவது, அந்த யோகம் எல்லாருக்கும் இருக்கையில், அதை அனுபவிக்கும் போகம், சிலருக்குத்தான் வாய்க்கிறது. ‘சுட்ட சட்டி’யா நாம் இருந்தால் கொஞ்சம் கடினம்தான். பச்சை மண்ணைக் குழைக்கலாம், பத்து வடிவம் செய்யலாம்!


சரி, இதையெல்லாம் நாம ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? கேள்வி வருது இல்லையா?


என் ஆசிரியர் கொடுத்த விளக்கம்: எல்லாம் சரியாக செய்தாலும் தவறிப் போகிறது இல்லையா, அதற்கு காரணம் என்னன்னு குழம்பிப் போய் நாம் நின்று விடக்கூடாது. அதற்கு காரணம் இதுதான் என்று தெரிந்து கொண்டு, தொடர்ந்து உன் வேலையை செய்து கொண்டிரு என்பதற்குதானாம். ஊழின் மேல பொறுப்பை போட்டுட்டு உட்கார்ந்து கொள்ளாதே என்பது கருத்து. அதனால்தான் இந்த அதிகாரத்தைத் தொடர்ந்து பொருட்பாலை ஆரம்பித்தாராம். பொருட்பாலில் பல இடங்களில் ஊழை எப்படி உதைப்பது என்பதைச் சொல்லியிருக்கிறார்.


நாமும் சில குறள்களைப் பார்த்துள்ளோம்.

“மடுத்தவாயெல்லாம் பகடன்னான் ..” ---குறள் 624; காண்க 02/05/2021 (105)

“ஊழையும் உப்பக்கம் …” ---குறள் 620; காண்க 18/03/2021 (60)


சரி, இன்றைய குறள்:


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.” ---குறள் 377; அதிகாரம் – ஊழ்


கோடி கோடியாக சேர்த்தார்க்கும், அனுபவிக்க ‘மச்சம்’ இல்லையென்றால் அவர்கள் அனுபவிப்பது அரிது. அனுபவிக்கவே முடியாதுன்னு சொல்லலை. அதைக் கவனித்தீர்களா? அரிது என்றுதான் சொல்லியிருக்கிறார்.


கோடி தொகுத்தார்க்கும் = பல பொருட்களை கோடி, கோடியாக சேர்த்தாலும்; வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது = நமக்கு அதை அனுபவிக்கனும் என்று இருந்தால் ஒழிய அனுபவிக்க இயலாமல் போகலாம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






12 views0 comments

Comments


bottom of page