24/05/2022 (452)
எரியால் சுடப்படினும் எழுந்து வரவும் கூடும். ஆனால், அருந்தவத்தால் உயர்ந்தப் பெரியாரைப் பிழைத்தால் எழவே முடியாதுன்னு ஒரு குறிப்பைச் சொன்னார் நம் பேராசான் குறள் 896ல்.
ஒருத்தனுக்கு வகை வகையாக, பல வகையிலும் சிறந்த வாழ்க்கை அமைந்து இருக்கலாம்.
ஒருவனோ, அல்லது ஒரு நாடோ நலமாகச் சிறந்து தழைக்க நான்கு காரணிகள் இருக்காம்.
அவையாவன: 1. அமைச்சு - அதாவது தக்க சமயத்தில் தக்கவாறு நடக்க முன்கூட்டியே ஆய்ந்து உரைக்க வல்லவர்கள் சூழ்ந்து இருப்பது; 2. நாடு – தமக்கென்று ஒரு இடம் (நமக்கெல்லாம், வீடே நாடு); 3. அரண் – பாதுகாப்பு. அதாவது, எதுவும் எளிதில் நம்மைத் தாக்கா வண்ணம் அமைந்துள்ள பாதுகாப்பு வளையம். இந்தக் காலத்தில் insurance என்கிறார்களே அது போல; மேலும் 4. படை – யாராவது தாக்கவரின், நம்மைத் தாங்கிப் பிடிக்க சுற்றமும் நட்பும், அதற்கான கருவிகளும், உபாயங்களும்.
நாடோ, வீடோ நலமாக இருக்க: அமைச்சு, நாடு, அரண், படை இந்த நான்குதான் பெரும்பான்மையான காரணிகள்.
அதற்கு ஒரு படி மேலே, அவன் கொடுத்துவைத்திருந்தால், வானாளாவியச் செல்வங்கள் (resources) கொட்டிக் கிடக்கும். இப்படியெல்லாம், ஒரு இடத்திலேயே அமைந்திருந்தால் எவ்வளவு பெரிய பெருமதி அது? மிகவும் சிறப்பு அல்லவா? அப்போ, அவன் ராஜா, ராஜாதிராஜன் அல்லவா?
ஆனால், அவ்வளவு கொடுத்து வைத்திருந்தாலும், அதையும் கெடுக்க வல்லதாம் பெருந்தகை கொண்ட உயர்ந்தோரிடம் வாலை ஆட்டுவது!
அரசனும் அல்லல் படுவான் என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.” --- குறள் 897; அதிகாரம் – பெரியாரைப்பிழையாமை
தகைமாண்ட தக்கார் செறின் = அருந்தவத்தால் ஞானத்தில் உயர்ந்தவர்கள் வேறுபட்டால், அவர்களிடம் மனம். மொழி, மெய்களால் தவறாக நடந்தால்; வகைமாண்ட வாழ்க்கையும் = மிகச் சிறந்த வாழ்க்கையும்; வான்பொருளும் = வானாளாவியச் செல்வங்களும்; என்னாம் = என்ன செய்யும்? ஒன்றும் உதவிக்கு வராது;
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments