29/09/2021 (218)
உலகம் எப்ப சிரிக்கும், ஊர் எப்ப சிரிக்கும் என்பதை நேற்று பார்த்தோம். வள்ளுவப் பெருமான் அதற்கும் மேலே போகிறார்.
எல்லாப் படைப்புகளுக்கும் ஐந்து பூதங்கள் அடிப்படை. அவையாவன: நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு. இதைத்தான் பஞ்ச பூதங்கள் என்கிறார்கள். இதன் கலவைதான் அனைத்திற்கும் மூலம்.
அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கும். இதைத்தான் மேக்ரோகோஸம் (macrocosm) , மைக்ரோகோஸம் (microcosm) என்று அறிவியல் அறிமுகப் படுத்துகிறது.
“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.” --- குறள் 27; அதிகாரம் – நீத்தார் பெருமை
பேராசிரியர் மு.வ உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
இந்தக் குறளை சற்று விரிவாக முன்பொரு முறை பார்த்துள்ளோம்.
நம்முள்ளே இருக்கும் இந்த ஐந்து பூதங்களும் தமக்குள்ளேயே சிரிக்குமாம். எப்போது என்றால் கூடா ஒழுக்கம் நம்மிடையே இருக்குமானால்.
கூடா நட்பு நமக்குத் தெரியும். அது என்ன கூடா ஒழுக்கம். வெளி உலகத்திற்கு ஒழுக்கமாகவும் பற்று அற்று இருப்பது போல நடந்து கொண்டு, யாருக்கும் தெரியாது என்று, உள்ளே வேற மாதிரி இருக்கும் ஒழுக்கம்தான் கூடா ஒழுக்கம். இதற்கு ஒரு அதிகாரம் (28வது அதிகாரம்) வைத்திருகிறார் நம் பேராசான். நல்ல வேளை, இது துறவறவியலில் வருகிறது. அப்போ நமக்கு பரவாயில்லையா என்றால் அப்படியில்லை. அது ஒரு உயர்ந்த நிலை அதை நோக்கி எல்லோரும் முயல வேண்டும். இது நிற்க.
வஞ்ச மனதின் இந்த திருட்டுச் செயல்களைப் பார்த்து நம்முள்ளே இருக்கும் இந்த ஐந்து பூதங்களும் உள்ளுக்குள்ளே சிரிக்குமாம். சொல்கிறார் நம் பெருந்தகை.
“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.” --- குறள் 271; அதிகாரம் – கூடா ஒழுக்கம்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் = வஞ்ச மனதின் இந்த மறைவான, மாறுபாடான ஒழுக்க(த்தைப் பார்த்து); பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் = நம்மோடு கலந்துள்ள பூதங்கள் ஐந்தும் உள்ளுக்குள்ளேயே சிரிக்கும்.
அது ஏன் உள்ளுக்குள்ளேயே சிரிக்கனும்? யோசிப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios