17/06/2022 (476)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’, ‘பொருட்பொருளார்’, ‘பொதுநலத்தார்’, ‘தகைசெருக்கிப் பாரிப்பார்’, ‘நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர்’ ‘மாய மகளிர்’ என்று இதுகாறும் சொல்லிவந்த வள்ளுவப் பெருந்தகை அடுத்து ‘வரைவிலா மாணிழையார்’ என்கிறார்.
மாணிழையார் என்றால் மாட்சிமை பொருந்தியவர்கள் என்று பொருள். வரைவிலா என்றால் எந்த வரைமுறையும், ஒழுக்கமும் இல்லாத என்று பொருள். என்ன மாதிரி வார்த்தைகளை வைத்து விளையாடுகிறார் நம் பேராசான்!
அவர்களின் தோள் எப்படி இருக்கும் என்றால் மென்தோளாம்! அதாவது அழகானத் தோள்களாகத் தெரியுமாம்.
யாருக்கு?
பூரியர்களுக்காம். பூரியர் என்றால் ஒழுக்கம் கெட்டவர்கள், அதிலே கொஞ்சம் weak ஆனவர்கள்.
அதுவும் எப்படிப்பட்ட பூரியர்கள் என்றால் புரையிலாப் பூரியர்கள். புரை என்றால் உயர்வு, அறிவு. புரையிலா என்றால் எந்த ஒரு சிறப்பும் இல்லாத, தாழ்ந்த என்று பொருள்.
அதாவது Agmark அக்மார்க் முத்திரைப் பெற்ற பூரியர்கள் போல இருக்கு!
“வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.” --- குறள் 919; அதிகாரம் - வரைவின் மகளிர்
வரைவு இலா மாணிழையார் மென்தோள் = எந்த வரைமுறையும் இல்லாத வரைவின் மகளிரின் தோள்கள்; அளறு = நரகம், சேறு; புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு = அறிவில்லா, ஒழுக்கம் கெட்டவர்கள் ஆழ்ந்து கிடக்கும் நரகம், சேறு, புதை மணல்.
உங்களைச் சொல்லலைங்க. நீங்க அப்படிப்பட்டவங்க இல்லை என்பது எனக்குத் தெரியும் என்கிறார் நம் பெருந்தகை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments