26/12/2023 (1025)
அன்பிற்கினியவர்களுக்கு:
உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு வானுயர் தோற்றம் மட்டும் காட்டினால் அதனால் என்ன பயன் என்றார்.
அந்த வானுயர் தோற்றத்தை விரிக்கிறார். ஒரு பசுவானது புலியின் தோலை தன் மீது போர்த்திக் கொண்டு, புலி மாதிரி வேடமிட்டுக் கொண்டு நல்ல பசுமையாக விளைந்த நிலத்தில் மேய முயலுமாம்!
என்ன ஒரு கிண்டல் பாருங்கள்! பொறுத்தமில்லா வேடம்; பொருந்தாச் செயல். புலி புல்லை மேயுமா? மேயாது.
முதலில் அது புலியோ என்று ஐயம் வந்து நாம் சற்று பயந்தாலும் அதன் செயலைப் பார்த்தால் அதன் கபட நாடகம் வெளிப்பட்டுவிடும். அந்தப் போலி வேடதாரி பிடிபட்டுவிடுவான்.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. - 273; - கூடா ஒழுக்கம்
பெற்றம் = பசு; வலி இல் நிலைமையான் வல் உருவம் = தவ வாழ்க்கைக்கு உரிய மனத்தின்மை இல்லாதவன் உயரிய தவ வேடம் போட்டுக் கொண்டு அந்த வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல்களைச் செய்வது; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று = பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பசுமையாக விளைந்த நிலத்தில் மேய முயலுவதைப் போல.
தவ வாழ்க்கைக்கு உரிய மனத்தின்மை இல்லாதவன் உயரிய தவ வேடம் போட்டுக் கொண்டு அந்த வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல்களைச் செய்வது, பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பசுமையாக விளைந்த நிலத்தில் மேய முயலுவதைப் போல. விரைவில் உண்மைத் தன்மை வெளிப்பட்டு அவமானப்பட நேரிடும்.
சரி, வெளிப்பட்டால்தானே அவமானம்! அதுவரை அவன் சாமார்த்தியசாலியா என்றால், நிச்சயம் அவ்வாறு அவன் எண்ணபடமாட்டான் என்கிறார்.
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274; - கூடா ஒழுக்கம்
புதல் = புதர்; புள் = பறவை; தவம் மறைந்து அல்லவை செய்தல் = ஒய்வெடுக்க வேண்டிய பருவத்திற்குரிய வேடத்தைப் போட்டுக் கொண்டு, அந்த வேடத்தில் ஒளிந்து கொண்டு, அந்த நிலைக்குச் சிறிதும் ஒவ்வாத அறமற்றச் செயல்களைச் செய்வது ; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று = ஏதும் அறியாப் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் மறைந்து இருந்து கொண்டு வலையை வீசி வைத்துவிட்டு அதில் சிக்கியவற்றைச் சீரழிக்க காத்திருப்பது எப்படியோ அப்படிப் பார்க்கப்படும்.
ஒய்வெடுக்க வேண்டிய பருவத்திற்குரிய வேடத்தைப் போட்டுக் கொண்டு, அந்த வேடத்தில் ஒளிந்து கொண்டு, அந்த நிலைக்குச் சிறிதும் ஒவ்வாத அறமற்றச் செயல்களைச் செய்வது, ஏதும் அறியாப் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் மறைந்து இருந்து கொண்டு வலையை வீசி வைத்துவிட்டு அதில் சிக்கியவற்றைச் சீரழிக்க காத்திருப்பது எப்படியோ அப்படிப் பார்க்கப்படும்.
கபட நாடகம் ஆடுபவர்களைப் போன்ற கொடிய கயவர்கள் இருக்க முடியாது என்கிறார். அதுவும் சரிதானே. புலியைத் தெரியும்; பசுவையும் தெரியும். புலி வேடமிட்ட பசு நகைப்பிற்கு உள்ளாகும். ஆனால், பசு வேடமிட்ட புலி? பிறரை ஏமாற்றி இரையாக்கும். இவர்களிடம்தாம் கவனமாக இருக்க வேண்டும்.
நாளைத் தொடரலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
These thirukkurals remind me Many of our so called Godmen....